பிறப்பு குறித்த காலத்திற்குள் பதிவு செய்யப்படாவிட்டால், அபராதம் ரிம1000: ஏழைக்களுக்குப் பெரும் சுமையாக இருக்கும், எதிரணியினரின் சாடல்

 

பிறப்பு பதிவு செய்யப்படும் விவகாரத்தில், ரிம1,000 அபராதம் விதிக்க உள்துறை அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கை சட்டப்பூர்வமானதா என்ற கேள்வியை எதிரணியினர் எழுப்பியுள்ளனர்.

இந்த அளவுக்கு அதிகமான அபராதம் ஏழைகளுக்கு பெரும் சுமையாக இருக்கும் என்பதோடு இந்நடவடிக்கை நாடற்ற குழந்தைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாரம் செவ்வாய்க்கிழமையிலிருந்து முன்னதாக ரிம50தாக இருந்த அபராதம் அதிகரிக்கப்படும் நடவடிக்கை அமலுக்கு வருகிறது. பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் 1957 மற்றும் சுவீகாரச் சட்டம் 1952 களுக்கான திருத்தம், அதில் அனைத்து பிறப்புகளும் 60 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் விதியும்கூட, முறை தவறிப் பிறந்த குழந்தைகள் உட்பட, கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அரசாங்கம் இந்த அபராத அதிகரிப்பு முடிவைச் செய்தது என்று துணை உள்துறை அமைச்சர் கூறியதாக பெர்னாமா தெரிவிக்கிறது.

இதற்கான காரணத்தை பின்னர் விளக்கிய துணை அமைச்சர் நூர் ஜாஜ்லான், பெற்றோர்கள் அவர்களுடைய பிள்ளைகளை உடனடியாகப் பதிவு செய்யவும், அவ்வாறு செய்யாததால் பின்னர் எழும் ஆவணம் பற்றிய பிரச்சனைகளால் அவர்களின் குழந்தைகள் நாடற்றவர்களாவதைத் தவிரிக்கவும் பெற்றோர்களுக்கும் அழுத்தம் கொடுப்பது இதன் நோக்கம் என்றார்.

இது கடுமையான விவகாரம்

அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஸுரைடா கமாருடின், தேசியப் பதிவு இலாகாவுக்கு இந்தத் தண்டனையை விதிக்கும் அதிகாரம் இல்லை. மேலும், இச்சட்டம், அதன் திருத்தங்கள் உட்பட, தண்டனைகள் பற்றி எதையும் திட்டவட்டமாக கூறவில்லை.

இது ஒரு கடுமையான விவகாரம். இது ஒவ்வொரு மலேசியரையும் பாதிக்கிறது என்பதால், இது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் இன்று வெளியிட்ட ஒர் அறிக்கையில் கூறுகிறார்.

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் இதை கடுமையாக எதிர்க்காவிட்டால், நான் எனது கடமையிலிருந்து தவறி விட்டதாகும்”, என்று பிகேஆர் வனிதா தலைவரான அவர் மேலும் கூறினார்..

ரிம1,000 அபராதம் கட்ட முடியாத பெற்றோர்களின் நிலை என்னவாகும்?

ஏன் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்ய தவறிவிடுகிறார்கள் என்பதை தேசியப் பதிவு இலாகா முதலில் கண்டறிய வேண்டும் என்று கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் கூறினார்.

கூடுதல் அபராதம் விதிப்பது பிரச்சனையைத் தீர்த்து விடாது என்று கூறிய அவர், ரிம1,000 அபராதம் கட்ட இயலாத பெற்றோர்களுடைய குழந்தைகளின் கதி என்னவாகும் என்று அவர் வினவினார்.

இந்நாட்டில் 18 வயதிற்கும் குறைவான 290,437 நாடற்ற குழந்தைகள் இருப்பதாக கடந்த அக்டோபரில் உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறியுள்ளார்.