‘ஓப்ஸ் லாலாங்’ கருத்தரங்கு – சுவாராம் டாக்டர் மகாதீரை அழைக்கவுள்ளது

மலேசிய மனித உரிமை குழு (சுவாரா ரக்யாட் மலேசியா-சுவாராம்), இம்மாதம் ‘ஓப்ஸ் லாலாங்’கின் 30-வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ள கருத்தரங்கிற்கு, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் மற்றும் முன்னாள் தேசியப் போலிஸ்படைத் தலைவர் ஹனீஃப் ஒமர் இருவருக்கும் அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் அக்டோபர் 28 மற்றும் 29-ஆம் தேதிகளில், கோலாலம்பூர்-சிலாங்கூர் சீன மாநாட்டு மண்டபத்தில் அந்நிகச்சி நடைபெறவுள்ளதாக சுவாராம் நிர்வாக இயக்குனர் சிவன் துரைசாமி தெரிவித்தார்.

“அக்டோபர் 29-ம் தேதி, ஓப்ஸ் லாலாங்கின் முன்னாள் கைதிகளான டாக்டர் குவா கியா சோங், மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் நாசீர் ஹசிம் மற்றும் அமானா-ஐச் சேர்ந்த முகமட் சாபு ஆகியோரையும் அழைக்க உள்ளோம்.”

“இவர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத் தடுப்புகாவல் அனுபவங்கள் குறித்து நம்முடன் பேசுவார்கள். இந்நிகழ்ச்சியி ல் மகாதீர் மற்றும் ஓப்ஸ் லாலாங்கின் போது பணியாற்றிய, மூத்த அரசாங்க அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம்,” என இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிவன் தெரிவித்தார்.

1987-ல், நூற்றுக்கும் மேற்பட்ட சமூக ஆர்வளர்கள், அரசியல் தலைவர்கள், கல்விமான்கள் பலர், இசா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்.

அக்காலக்கட்டத்தில் ‘சின் சியூ லெய்லி’ , ‘தி ஸ்டார்’  மற்றும் ‘வாத்தான்‘ போன்ற நாளிதழ்கள் தடைசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.