14-வது பொதுத் தேர்தல் தயார்நிலைக்கு, பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டாக்டர் மகாதீர் முகமதுவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை என, அதன் தலைமைச் செயலாளர் ஆ.சிவராஜன் கூறினார்.
“நாங்கள் பேசும் கடைசி நபராகதான் மகாதீர் இருப்பார். பக்காத்தான் ஹராப்பானில் பி.எஸ்.எம். அதிகாரப்பூர்வமாக இணைய இயலாமல் இருப்பதற்கு, அக்கூட்டணியில் அவர் நுழைந்ததும் ஒரு காரணம்,” என்று சிவராஜன் பெரித்தா டெய்லியிடம் கூறியுள்ளார்.
பல்முணைப் போட்டிகளைத் தவிர்க்கும் வகையில், தொகுதி பங்கீடு குறித்து மகாதீருடன், ஏன் பி.எஸ்.எம். விவாத்திக்கக்கூடாது என்று கேட்டதற்கு சிவராஜன் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
வரவிருக்கும் பொதுத் தேர்தலில் , பாஸ் கட்சியைப் போலவே, பி.எஸ்.எம். கட்சியும் பல்முணை போட்டிக்குக் காரணமாக அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மகாதீர் குறித்து சிவராஜன் மேலும் விரிவாக விளக்கினார்.
“வரலாற்று பிழைகள் பல உள்ளன. அவருடையக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது, அவர் மாறிவிட்டார் என்று நாங்கள் நினைக்கவில்லை. 22 ஆண்டுகளாக நவ-தாராளவாத கொள்கையை அவர் நடைமுறை படுத்தியுள்ளார், அவர் மாறவில்லை.”
பிகேஆர் தலைவர் அன்வாருடன் மகாதீரை ஒப்பிடுகையில், பி.எஸ்.எம். கட்சிக்கும் அனுவாருக்கும் சில ஒற்றுமைகள் உள்ளதாக அவர் கூறினார்.
“எங்களுக்கு ஒரே மாதிரியான எண்ணங்கள் இருந்தன. அன்வாரின் கொள்கைகள் மக்கள் சார்புடையவை. அவர் மக்களின் வலிமை பற்றி பேசினார். பொருளாதார ரீதியாக அவர் செல்வத்தைப் பகிர்ந்துகொண்டு, மக்களுக்கு முன்னுரிமை வழங்குபவர், என்றும் சிவராஜன் தெரிவித்தார்..
“ஆனால், டாக்டர் மகாதீருடன், பக்காத்தான் ஹராப்பான் எதை நோக்கிச் செல்கிறது என்பது எங்களுக்குத் தெரியவில்லை.”
முந்தைய பக்காத்தான் ரக்யாட்டில் இணைய, பலமுறை விண்ணப்பம் செய்தும், அவர்களிடமிருந்து சரியான பதில் எதுவும் வராததும், தற்போது ஹராப்பான் கூட்டணியில் இணைவதில் ஒரு தயக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் மேலும் கூறினார்.
“அதுமட்டுமின்றி, பக்காத்தான் அரசாங்கத்திற்குள் எங்களின் கொள்கைகளை நுழைப்பதும் அவ்வளவு சுலபமான காரியமல்ல,” என்றும் சிவராஜன் தெரிவித்தார்.