‘லிட்டல் இந்தியா’வில் வியாபாரம் சரிந்துவிட்டது, வியாபாரிகள் புகார்

தீபாவளியைக் கொண்டாட இன்னும் ஒருசில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், கிள்ளான் ‘லிட்டல் இந்தியா’வில் வியாபாரம் திருப்திகரமாக இல்லை என வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.

கடந்த 2 ஆண்டுகளாக, கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்.பி.கே) ஒதுக்கி கொடுத்திருக்கும் இடத்திற்கு, வியாபாரத்தை இடம் மாற்றியதில் இருந்து வியாபாரம் சரிவு கண்டதாக திருமதி டல்பீர் கூறினார்.

“இவ்வாண்டு படு மோசம். வாடிக்கையாளர்களே இல்லை, மக்கள் கூட்டமே இல்லை,” என்று அவர் கூறினார்.

எம்.பி.கே. அவர்களை அருகிலுள்ள ஒரு சந்துக்கு இடமாற்றம் செய்யும்முன், ஜாலான் தெங்கு கிளானா, கடைகளின் நடைபாதையில் அவர் இந்தியர்களின் பாரம்பரிய பலகாரங்களை விற்று வந்ததாக தெரிகிறது.

“இந்த இடத்திற்கு எங்களைத் தூக்கி எறிந்த பின்னர், வாடிக்கையாளர்கள் வருவதில்லை, தீபாவளி நெருங்கிவிட்ட போதிலும்,” என்றார் அவர்.

ஜாலான் தெங்கு கிளானாவில் இருந்து ‘லிட்டில் இந்தியா’ வழியாகப் பிரதான நெடுஞ்சாலை செல்கையில், அப்பகுதி வாடிக்கையாளர் கூட்டம் இல்லாமல், வெறிச்சோடி கிடப்பதாக  ஃப்.எம்.தி. செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக அங்கு வியாபாரம் செய்துவரும் டல்பீர், தன்னையும் தன்னைப்போன்ற இன்னும் 19 சிறுவியாபாரிகளையும் மீண்டும் ஜாலான் தெங்கு கிளானாவிலேயே வியாபாரம் செய்ய எம்.பி.கே. அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு முன், ஜாலான் தெங்கு கிளானாவில் அவர்களின் கடைகள் இருந்தபோது, அப்பகுதி உற்சாகமாக இருந்ததோடு, வாடிக்கையாளர்களையும் ஈர்த்து வந்ததாக கடைக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

வியாபார இடமாற்றத்தோடு, பொருள், சேவை வரியும் இவ்வாண்டு வாடிக்கையாளர் கூட்டம் குறையக் காரணம் என்று தான் நம்புவதாக, பி.லோகேஸ்வரி கூறினார்.

“கடந்த ஆண்டு கூட ஓரளவு பரவாயில்லை, இவ்வாண்டு படுமோசமாக உள்ளது. அதிகமானோர் பொருள்கள் வாங்கவில்லை, சேலைகள் கூட அதிகம் விற்கப்படவில்லை,” என்றார் அவர்.