ஹரப்பான் பேரணி: கூட்டம் மெதுவாக வந்துகொண்டிருக்கிறது; இளைஞர்கள் எங்கே?

 

ஹரப்பான் ஏற்பாடு செய்துள்ள “கொள்ளைக்கார ஆட்சி எதிர்ப்பு” பேரணி திட்டமிட்டிருந்துவாறு மணி 4.10 க்கு பெட்டாலிங் ஜெயா, படாங் திமோரில் பக்கத்தான் ஹரப்பான் இளைஞர் பிரிவுத் தலைவர்களின் உரையாற்றலுடன் தொடங்கிற்று.

நூறு பேர்களுக்கு மேற்பட்டவர்கள் மேடைக்கு அருகிலிருந்தவாறு நிகழ்ச்சிகளைக் கவனித்தனர். மற்றவர்கள் பாடாங்கைச் சுற்றியுள்ள நிழற்பகுதியில் இருந்தனர்.

ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட் மேடைக்கு வந்து அங்கு அமர்ந்திருந்த இதர கூட்டணிக் கட்சிகள் தலைவர்களுடன் அமர்ந்தார்.

பாடாங் திமோரில் கூடியிருப்பவர்களில் பெரும்பாலானோர் நடுவயதுள்ளவர்களும் முதியவர்களுமாகக் காணப்பட்டனர்.

இது குறித்து பேசிய பத்து அம்னா தொகுதித் தலைவர் இஷாக் சூரின், இளைஞர்கள் கட்டாயமாக முன்வந்து இந்தக் கொள்ளைக்கார ஆட்சி எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

“மக்கள் கொடுமையை எதிர்க்க வேண்டியது “வாஜிப்” (கட்டாயமானது); இதில் நீங்கள் எங்களுடன் இல்லாவிட்டால், அது பாவமாகும்.

“டாக்டர் மகாதிருக்கு வயது 92. அவர் இன்னும் நாட்டுக்காகப் போராடிக் கொண்டிருக்கிரார். இளைஞர்களாக இருப்பவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பது வெட்கப்பட வேண்டியதாகும்”, என்று 82 வயதான இஷாக் சூரின் கூறினார்.

 

 

மணி 4.30: சோசலிஸ் ஆல்டெர்னெட்டிப் என்று ஒரு குழுவினர் அங்கு கூடினர். அக்குழுவினரின் நோக்கம் முதலாளித்துவத்தை எதிர்ப்பது என்றும் ஹரப்பான் கூட்டணியை ஆதரிப்பதில்லை என்றும் அவர்களின் பிரதிநிதி முகமட் அமெருல் ஸூபார் கூறினார்.

“நாங்கள் தொழிலாளர்களை ஆதரிக்கிறோம்; முதலாளித்துவத்தையும் தேசியத்தையும் எதிர்க்கிறோம்.

‘எடுத்துக்காட்டு, நாங்கள் சம்பள உயர்வு கோருகிறோம் மற்றும் வீடுகளின் விலை குறைக்கப்பட வேண்டும். நாம் முதலாளித்துவத்திலிருந்து தப்பித்து சோசலிசத்தை அரவணைக்க வேண்டும்.

“முதலாளித்துவ பிரச்சனைகள் கவனிக்கப்படாவிட்டால், ஹரப்பான் ஆட்சி செய்தாலும்கூட மலேசியாவின் பிரச்சனைகள் தொடரும்”, என்று அமெருல் கூறினார்.

மணி 4.40: முதல் சுற்றுப் பேச்சை பிகேஆர் இளைஞர் தலைவர் நிக் நாஸ்மி நிக் அஹமட் தொடங்கினார். இளைஞர்கள் அனைவரும் வாக்காளர்களாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொன்டார்.

அன்வார், மகாதிர், கிட் சியாங் மற்றும் முகமட் சாபு தலைமையில் ஹரப்பான் 14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நல்ல வேய்ப்பு இருக்கிறது, ஆனால் அது இளைஞர்கள் வாக்குகள் இல்லாமல் முடியாது என்றார்.

தகுதி பெற்ற இன்னும் மூன்று இளைஞர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்துகொள்ளவில்லை என்றாரவர்.

அமனா இளைஞர் தலைவர் பாய்ஸ் பாட்ஸில், கூட்டத்தினரை “தங்காப் நஜி’ என்று முழங்க வைத்தார்.

தொடர்ந்து, டிஎபி இளைஞர் தலைவர் வோங் கா வோ, இக்கூட்டணி ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளுக்குள் மலேசியாவை மிகச் சுத்தமான 10 நாடுகளில் ஒன்றாக்கும் என்றார்.

இவர்களின் பேச்சுக்குப் பின்னர் சீன சிங்க நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

மணி 5.00: பெர்சத்து உச்சமன்ற உறுப்பினரும் முன்னாள் செய்தியாளருமான எ. காடிர் ஜாசின், கூட்டத்தினரின் எண்ணிக்கை பின்னர் கூடும், ஏனென்றால் மக்கள் கொள்ளைக்கார ஆட்சி மீது சலிப்படைந்து விட்டனர் என்றார்.

அதிகமான மக்கள் பேரணிக்கு வருவர் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், பொதுமக்கள் பங்கேற்பது முக்கியம் என்றார்.

கொள்ளைக்கார ஆட்சி பற்றி மக்கள் விழிப்படைந்துள்ளனர். அதைக் தடுக்க மக்கள் ஆவன செய்வர் என்றாரவர்.