லியு சின் தோங் : ஜொகூரின் மெகா திட்டங்கள், சாதாரண மக்களுக்குத் திட்டவட்டமாகப் பலனளிக்காது

ஜனநாயக செயற்கட்சியின் ஜொகூர் மாநிலத் தலைவர், லியு சின் தோங், இஸ்கண்டார் மேம்பாட்டுப் பகுதியில் நடந்துவரும் மெகா மேம்பாட்டுத் திட்டங்களால் சாதாரண மக்களுக்கு எந்தவொரு பயனுமில்லை என்று கூறியுள்ளார்.

இத்தகைய மேம்பாட்டுப் பெருந்திட்டங்களால், பொருளாதார நிலை சீராக இருப்பதாக மாநில அரசாங்கம் கூறுவதையும் அவர் மறுத்துள்ளார்.

மாநகராட்சி சேவைகள் மேம்படுத்தப்படவில்லை, சாலைகள் மற்றும் வடிகால்கள் இன்னும் சீர்படுத்தப்படாமல் அழுக்காக உள்ளன, பொது போக்குவரத்தை மேம்படுத்தத் தெரியாமல், சாலை நெரிசல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது, என்று அந்தக் குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜொகூரின் பொது கடற்கரைகளில், சீன நாட்டு மேம்பாட்டாளர்கள் உயர்ரக மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்தி, அவற்றைத் தனியார் இடங்களாக மாற்றிவிட்டனர் என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

அக்டோபர் 7-ல், ஜொகூர் மந்திரி பெசார் காலிட் நோர்டின் , மாநிலத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, மத்திய அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகள் மீது தான் முழு நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஜொகூரின் வளம் பகிர்ந்து அளிக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு நாளும் சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் மலேசியர்களின் எண்ணிக்கை, 2013-ல் 200,000 –ஆக இருந்தது இன்று 300,000 ஆக உயர்ந்திருக்காது, என்றும் லியு கூறினார்.

“அப்படி அவர்களால், செழிப்பான வாழ்க்கையை ஜொகூரிலேயே வாழ முடியும் என்றால், தினமும் வெளிநாட்டு தொழிலாளர்களாக அவர்கள் சிங்கப்பூர் செல்லத் தேவையில்லை,” என்ற அவர், இன்று ஜொகூரின் சிறு சிறு நகரங்களில் மக்கள் நிலையானப் பொருளாதாரத்தோடு வாழ, சிங்கப்பூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் பணியாற்றும் தொழிலாளர்களே காரணம் என்றும் விளக்கப்படுத்தினார்.

ஜொகூரில், 2016-ல் வேலையில்லா விகிதம் 3.6%, இது தேசிய நிலையைவிட (3.4%) மோசமானது.

“2007-ல், இது 2% மட்டுமே. கடந்தாண்டு, மலேசியாவில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை 10.5%, ஆனால் ஜொகூரில் மட்டும் 11.6%-ஆகப் பதிவாகியுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

பெங்கெராங்கில், எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்கள், ஜொகூர் மக்களிடையே வேலையில்லாப் பிரச்சனையைத் தீர்க்க உதவியிருக்க வேண்டும். ஆனால், அத்திட்டத்தின் கட்டுமானப் பணிகளில், பெரும்பாலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களே வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்தக் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தாலும், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை வளர்ச்சி பெற்றநிலையில் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், 2014-ல் எண்ணெய் விலை சரிவு கண்டதிலிருந்து, அத்துறை இன்னும் போராட்ட நிலையிலேயே உள்ளது,” என்றும் லியு சின் தோங் கூறினார்.