ஓரின உறவில் பெர்காசாவும் இந்து சங்கமும்

செண்பகம் : ஓரின உறவு என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று மலேசிய இந்து சங்கம், பெர்காசா அமைப்புடன் சேர்ந்து கண்டனம் செய்துள்ளதே! கோமாளியின் கருத்து என்ன?
 
கோமாளி : இந்து சங்கத்திற்கு கல்லை தூக்கி காலில் போட்டுக்கொண்ட நிலைதான். மனித உரிமை சார்புடைய அமைப்புகளின் ஏளனத்திற்கு உற்பட்டு வரும் பெர்காசாவோடு இந்து சங்கம் வெளியிட்ட செய்தி முட்டாள் தனமானது.
 
ஓரின உறவு என்பதைப்பற்றிய தனது செய்தியை விளக்கமளிக்க முற்பட்ட இந்து சங்கம், ஓரின உறவு என்பதை தாங்கள் வரவேற்கமாட்டோம். ஆனால், ஓரின தன்மை கொண்டவர்களின் மனித உரிமைகளை மதிக்கிறோம் என்றது. அந்த விளக்கம் அறிவு சார்ந்த கருத்தை எதிர்பார்க்க இயலாது என்பதுபோல் அமைந்தது.
 
செண்பகம்! ஓரின உறவு என்பதும் ஓரின தன்மை என்பதும் ஏதோ ஒருவகை காரணங்களால் இயற்கையாக உருவாகும் நிலையாகும். இதை அறிவியல் பூர்வமாக உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது.

இயற்கையின் படைப்பில் உண்டான குறைபாட்டினை சமூகம் குற்றமாக கருதும் நிலையில் இவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று யார் முடிவு செய்வது?
 
அதனால்தான், இந்தத் தரப்பினர் தங்களது நிலையை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தங்களுடைய வாழ்வியலை தவறாக கருத வேண்டாம் என்றும், தங்களால் யாருக்கும் தீமையில்லை எனவே, எங்களை வாழ விடுங்கள் என்று போராடுகிறார்கள்.
இவர்களுக்கான தீர்வை சமய அடிப்படையில் பெற இயலாது. சமய அடிப்படையில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். பிணத்திற்கு கூட போராடும் இனவாத நாட்டிலே, எங்கு போய் நீதி, நியாயம், தர்மத்தை தேடுவது?
மனித உரிமை அடிப்படையில் மட்டுமே, நம்மால் வாழ்வியல் பிரச்னைகளை நோக்க இயலும். இவ்வகையில் இந்து சங்கம் தனது பார்வையை செலுத்துவது நல்லது, வரவேற்க்கத்தக்கது. அதை விடுத்து பெர்காசா போல் செயல் படுவது பிற்போக்கானது.