ஹரப்பான் பேரணி: நஜிப் நாட்டின் எதிரி

 

இன்று பெட்டாலிங் ஜெயா, பாடாங் திமோரில் நடைபெற்ற ஹரப்பான் பேரணியில் இறுதி உரையாற்றிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட், மலேசியப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் “நாட்டின் எதிரி” என்று கூறினார்.

இன்று பிற்பகல் மணி 4.00 அளவில், பெட்டாலிங் ஜெயா, பாடாங் திமோரில் தொடங்கிய ஹரப்பான் கொள்ளைக்கார ஆட்சி எதிர்ப்பு பேரணி 7.00 லிருந்து 8.00 வரையில் ஒரு மணி நேர இடைவேளைக்குப் பின்னர் இரவு மணி 8.00க்கு மீண்டும் தொடங்கி இரவு மணி 11.00 க்கு முடிவுற்றது.

இப்பேரணியில் மொத்தம் 25,000 பேர் பங்கேற்றனர் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். ஆனால், மலேசியாகினியின் கணிப்புப்படி 8,000 பேர்தான் பங்கேற்றிருக்க முடியும்.

பேரணியில் பங்கேற்றவர்கள் மொத்தம் ரிம68,329 நன்கொடை வழங்கினர். பேரணிக்கான செலவு போக, எஞ்சியதை நான்கு கட்சிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

நஜிப் நாட்டின் எதிரி

இரவு மணி 10.20: இப்பேரணியின் மிக முக்கிய நபரான ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட் இந்நிகழ்ச்சியின் இறுதி உரையை ஆற்றத் தொடங்கினார்.

அவ்வுரையில் அவர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை நாட்டின் எதிரி என்று கூறினார்.

எதிரணியினர் ஆட்சியில் அமர்ந்தால், 2030 அளவில், மலேசியாவை உலகிலுள்ள 10 கறைபடியாத நாடுகளில் ஒன்றாக ஆக்குவதின் வழி மலேசியாவை ஹரப்பான் மீண்டும் ஓர் உயர்பண்புடைய நாடாக்கும் என்று மகாதிர் வாக்குறுதி அளித்தார்.

மேலும், ஐந்து ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள்: மலேசியன் அதிகாரி 1-ஐ (MO1) கைது செய்தல், 1எம்டிபி மற்றும் பெல்டா பற்றிய விவகாரங்களை விசாரிக்க ஓர் அரசு விசாரணை ஆணையம் அமைத்தல், மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் பணத்தைத் திருப்பிக் கொடுக்க ஒரு சுயேட்சையான அமைப்பை அமைத்தல் மற்றும் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தை (எம்எசிசி) நாடாளுமன்றத்தின்கீழ் வைத்தல் ஆகியவை அவற்றில் அடங்கும் என்று மகாதிர் சூளுரைத்தார்.

எதிர்காலத்தில் அரசாங்கத் திட்டங்களுக்கு நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதும் நிறுத்தப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.

இரவு மணி 8.30 லிருந்து மகாதிர் அவரது உரையை மணி 10.20 அளவில் தொடங்குவதற்கு முன்னர் ஹரப்பானின் இதர தலைவர்களும் மிகச் சுருக்கமாக பேசினர்.

பிகேஆரின் மூத்தவரும் முன்னாள் செனட்டருமான சைட் ஹுஸ்ஸின் அலி, இப்பேரணிக்கு மக்கள் அளித்திருக்கும் ஆதரவு 1எம்டிபி மீது அவர்கள் கொண்டிக்கும் சினத்தைக் காட்டுகிறது என்றார்.

மலேசியா கொள்ளைக்கார ஆட்சியின் பிரதமரால் நாடு பலவீனமாக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக தங்களுடைய பொருளாதார மற்றும் நிலவியல் சார்ந்த அரசியல் நலன்களை விரிவுபடுத்த நாட்டம் கொண்டுள்ள நாடுகளுக்கு இரையாகி வருகிறார் என்று பெர்சத்து துணைத் தலைவர் முக்ரீஸ் மகாதிர் கூறினார்.

நிலவியல் சார்ந்த அரசியல் மிக ஆபத்தானது ஏனென்றால் நாட்டின் இறையாண்மை அதில் சம்பந்தப்பட்டுள்ளது என்று மேலும் கூறினார்.

டிஎபியின் இடைக்காலத் தலைவர் டான் கோக் வை, இன்று அமனா தலைவர் மாட் சாபுவின் பிறந்த நாள் என்று அறிவித்தார். அவருடைய இலட்சியம் பிஎன் தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்துவதுதான் என்றார்.

அமனாவின் துணைத் தலைவர் சலாஹுடின் அயுப், நஜிப் ஒரு கிளப்டோமேனியா நோயாளி (கொள்ளையடிப்பதில் அளவுகடந்த பித்துப்பிடித்தவர்) என்று கூறினார்.

சமூக ஆர்வலர், ஹிசாமுடின் ராய்ஸ், அடுத்தத் தேர்தலுக்கு முன்பு இன்னொரு பேரணி நடத்த வேண்டும் என்றார். மேலும், மலேசியர்கள் தெருக்களுக்குச் செல்ல வேண்டும். ஹரப்பானுக்கு வாக்களிப்பதைத் தவிர மலேசியர்களுக்கு வேறு வழியில்லை என்றாரவர்.

நஜிப் தொடர்ந்து ஆட்சியிலிருந்தால், தானா மெலாயுவை எடுத்துக்கொள்ள சீனா தயாராகிவிடும் என்று அவர் மேலும் கூறினார்.

பெர்சே 2.0 தலைவர் மரியா சின், அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ஹரப்பான் ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்றார்.

சிரமங்களை எதிர்கொண்டுள்ள போதிலும், மாற்றத்தைக் கொண்டுவர் மக்கள் எழுச்சி பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அமனா தலைவர் முகமட் சாபு தாம் ஒரு கம்பத்துவாலா என்றும் தமது பிறந்த நாளை கொண்டாடியதே இல்லை என்றும் கூறினார். 63 ஆவது வயதில் இன்று அவர் தமது முதலாவது பிறந்த நாள் கேக்கை பெற்றுக்கொண்டார்.

டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், மக்கள் பித்துப்பிடித்த ஆளுங்கூட்டணியை நிராகரிக்க வேண்டும். உலகமே சொல்கிறது அவர்கள் ஊழல் பேர்வழிகள் என்று. ஆனால் அவர்கள் சுத்தமானவர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்.

பைத்தியம் பிடித்தவர்கள் மட்டுமே அவ்வாறு கூறுவார்கள். எந்த மருந்தும் அவர்களைக் குணப்படுத்த முடியாது என்று குவான் எங் மேலும் கூறினார்.

முன்னதாக பேசிய அன்வாரின் துணைவியாரும் ஹரப்பான் தலைவருமான டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் அவரது மிகச் சுருக்கமான 30 வினாடி பேச்சில், “அன்வாரை (இப்ராகிம்) மறந்து விடாதீர்கள், தியன் சுவாவை மறந்து விடாதீர்கள்”, என்று கேட்டுக்கொண்டார்.

“பொதுத் தேர்தலுக்கு வாருங்கள்; பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களியுங்கள்” என்று அவர் வேண்டிக்கொண்டார்.