மலேசியன் ஜெர்மன் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 45 ஆவது அக்டோபர்பெஸ்ட் விழா எவ்வித தடங்கலும் இன்றி நேற்றிரவு பினாங்கில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில், பினாங்கு ஒரு தாலிபான் நாடல்ல என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
சிலாங்கூர் அல்லது கோலாலம்பூரில் அக்டோபர்பெஸ்ட்டை தடை செய்வதில் சில தீவிரவாதிகள் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், பினங்கில் அவர்கள் வெற்றி பெறவே முடியாது என்று குவான் எங் தெரிவித்தார்.
இதர மாநிலங்களில் இது போன்ற விழா தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இங்கு நாம் சகோதரத்துவ உணர்வை பேணி வளர்க்கிறோம் என்று கூறிய குவான் எங், நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்த ஜெர்மன் சமூகத்தினர் இந்த “அச்சுறுத்தலை” எதிர்கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து இந்த விழாவை கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். இது நமது நாட்டின் வரலாற்றில் மிக நீண்டது என்றார்.
இந்த விழாவை ஏற்பாடு செய்வதில் கூட்டாக எவ்வித பயமுமின்றி ஈடுபட்டிருந்த ஜெர்மனியர்களையும் மலேசியர்களையும் பாராட்டிய குவான் எங், பினாங்கில் இன மற்றும் சமய தீவிரவாதத்திற்கு இடமில்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.