2014-ல், காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370-ச்சின் தேடலைத் தொடர, கடந்த செவ்வாய்க்கிழமை மூன்று நிறுவனங்களிலிருந்து முன்மொழிவுகளை மலேசியா பெற்றுள்ளது, இருப்பினும், அதுதொடர்பாக இன்னும் முடிவெடுக்கப்படவில்லை எனப் போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய் தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் , 239 பேரை ஏற்றிகொண்டு கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் செல்லும் வழியில், தென்னிந்திய பெருங்கடலில் MH370 காணாமல் போனது. காணாமற்போன உலகின் மிகப்பெரிய விமான மர்மங்களில் இதுவும் ஒன்றாகும்.
அமெரிக்காவைச் சேர்ந்த கடற்படை ஆய்வு நிறுவனமான ஓஷன் இன்பினிட்டி, டச்சு நிறுவனமான ஃப்குரோ மற்றும் அடையாளம் தெரியாத ஒரு மலேசிய நிறுவனத்திடமிருந்தும் அம்முன்மொழிவுகளைப் பெற்றுள்ளதாக லியோ தெரிவித்தார்.
“நாங்கள் புதிய தேடலைத் தொடங்குகிறோமா இல்லையா என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை,” என்று லியோ கோலாலம்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நிருபர்களிடம் கூறினார்.
“நாங்கள் அந்நிறுவனங்களுடன் கலந்துபேச வேண்டும், அதற்கு சிறிது காலம் எடுக்கும்,” என்று அவர் கூறினார்.
இவ்வாரத் தொடக்கத்தில், மலேசியா MH370 தேடலை மீண்டும் தொடங்கும் என்று ஆஸ்திரேலியச் செய்தி ஊடகத் தகவல்கள் தொடர்பில் லியோ இவ்வாறு கருத்துரைத்தார்.
காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு இடையே, கடந்த ஜனவரி மாதம் , ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகள், 200 மில்லியன் டாலர் (யுஎஸ் $ 159.16 மில்லியன்) செலவில் மேற்கொண்டுவந்த 2 வருட தேடலை நிறுத்தின.
ஒரு முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னர் – சீனா மற்றும் ஆஸ்திரேலியா- முத்தரப்புக் குழுவில், மற்ற நாடுகளின் முன்மொழிவுகளைக் கலந்துபேச வேண்டுமென்றும் லியோ கூறினார்.
விமானம் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டும், பணம் செலுத்துங்கள் என்று ஓஷன் இன்ஃபெனிட்டி பிரதிநிதிகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.