மந்திரி கைரி மலேசியாகினியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லையாம்

புத்ரா ஜெயாவில் இன்று நடைபெற்ற இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின் நிகழ்ச்சியிலிருந்து மலேசியாகினி வெளியேற்றப்பட்டது.

செய்தியாளர் கூட்டத்திற்கு முன்பு இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் கைரி ஜமாலுடினின் உதவியாளர் அங்கிருந்த செய்தியாளர்களிடமிருந்து அவர்களின் கேள்விகளைச் சேகரித்தார்.

அதன் பின்னர், செய்தியாளர்களின் மேசைக்குத் திரும்பி வந்த அந்த உதவியாளர் மலேசியாகினியை அழைத்து அங்கிருந்து வெளியேறும்படி கேட்டுக்கொண்டார்.

“நான் மன்னிப்பு கோருகிறேன். ஒய்பி மலேசியாகினியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்பதோடு உமக்கு இங்கு இருக்க அனுமதி இல்லை.

“நான் உம்மை இங்கிருந்து வெளியேறும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் மன்னிப்பு கோருகிறேன்”, என்று அந்த உதவியாளர் கூறினார்.

ஒரு செய்தியாளர் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு அரசாங்க அதிகாரிகள் அவர்களின் ஊடகச் செயலாளர்கள் அல்லது உதவியாளர்கள் மூலம் செய்தியாளர்களிடமிருந்து கேள்விகளைச் சேகரித்துக்கொள்வது மலேசியாவில் வழக்கமாக நடக்கும் செயலாகும்.

இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை நிகழ்ச்சியிலிருந்து மலேசியாகினி வெளியேற்றப்படுவது இதுதான் முதல்தடவை. பிரதமர் அலுவலகம், கஜானா, தற்காப்பு அமைச்சு மற்றும் எம்சிஎ தலைமையகத்தின் செய்தியாளர்கள் கூட்டங்கள் ஆகிவற்றிலிருந்து மலேசியாகினி தடை செய்யப்பட்டுள்ளது.