கடந்த பிப்ரவரி மாதம் கடத்தப்பட்ட பாதிரியார் ரேய்மண்ட் கோ குடும்பத்தாரிடம் ஊடகங்களிடம் பேசக் கூடாது என்றும் மெழுகுதிரி ஏந்திய நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் போலீசார் வலியுறுத்தி இருந்தனராம்.
கோவின் துணைவியார் சூசன்னா லியு, மார்ச் 6-இல் சிலாங்கூர் குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் பாட்சில் அஹமட்டைச் சந்தித்தபோது அவரிடம் அவ்வாறு பணிக்கப்பட்டது. பின்னர் மார்ச் 23-இல் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்காரைச் சந்தித்தபோதும் அவரும் அதையே வலியுறுத்தினார்.
இன்று மனித உரிமை ஆணைய(சுஹாகாம்)த்தின் பொது விசாரணையில் சாட்சியமளித்த லியு, ஊடகங்களிடம் பேசுவதால் விசாரணைக்குச் சிக்கல் உண்டாகலாம் என்று காலிட் குறிப்பிட்டதாகக் கூறினார்.
“கடத்தல்காரர்கள் எதுவும் பேசாமல் மெளனமாகி விடுவார்கள். பிறகு அவர்களைக் கண்டுபிடிப்பது சிரமமாகிவிடும்”, என காலிட் கூறினாராம்.
கடந்த நவம்பரிலிருந்து காணாமல்போன நால்வர் குறித்து சுஹாகாம் பொது விசாரணை ஒன்றை நடத்தி வருகிறது.