மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை: நஜிப்பின் இலக்கு

எதிர்வரும்  பொதுத்தேர்தலில்    பாரிசான்   நேசனல்  மூன்றில்   இரண்டு  பங்கு   பெரும்பான்மை   பெற    வேண்டும்    என்பது    பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கின்  இலக்குகளில்   ஒன்று.

இன்று   பிஎன்  ஒருங்கிணைப்பாளர்களுக்காக  நடைபெற்ற   தேர்தலுக்கு-முந்திய  கூட்டமொன்றில்   நஜிப்    இதைத்    தெரிவித்தார்.

“பிரதமர்  மூன்றில்  இரண்டு  பங்கு    பெரும்பான்மை    பெறுவது   குறித்து   குறிப்பிட்டார்.   மூன்றில்-இரண்டு  பங்கு   பெரும்பான்மை   பெறுவது   மிக  முக்கியம்   என்பதை   நஜிப்     வலியுறுத்தினார்”,  என    அகூட்டத்தில்    கலந்துகொண்ட   சுங்கை   புசார்    அம்னோ   தலைவர்   புடிமான்   முகம்மட்   சோதி   கூறினார்.

தேர்தல்   தொடர்பாக   சில   மாற்றங்களைச்    செய்யப்போவதாகவும்    நஜிப்   கூறியிருக்கின்றார்.  பிஎன்  கட்சிகள்    அவை    பாரம்பரியமாக    போட்டியிட்டு  வந்த   இடங்களிலேயே    தொடர்ந்து  போட்டியிடுவது    உறுதியல்ல    என்றாரவர்.

 

கடந்த   மூன்று   பொதுத்   தேர்தல்களில்  அப்படிப்பட்ட     நடைமுறை    பின்பற்றப்பட்டு    வந்துள்ளது   என்று   கூறிய   சிலாங்கூர்   அம்னோ   தொடர்புத்  தலைவர்   நோ   ஒமார்,  இப்போது   அதை  மாற்ற    வேண்டிய  தருணம்    வந்துவிட்டதாக   நஜிப்    நினைப்பதாகக்    குறிப்பிட்டார்.

“தலைவர்   கூறியதுபோல்   சில  மாற்றங்களைச்    செய்ய    வேண்டிய   நேரம்  வந்து   விட்டது.  எந்தவொரு  இடமும்  குறிப்பிட்ட   ஒரு  கட்சிக்குச்   சொந்தமானதல்ல.

“அது  (குறிப்பிட்ட   வேட்பாளர்களால்)   வெல்லத்தக்கதுதானா,   வேட்பாளர்களை  மக்கள்   ஏற்றுக்கொள்வார்களா   என்பதையெல்லாம்  ஆராய    வேண்டியுள்ளது”,  என்று   நோ   கூறினார்.