இன்று காலை, பினாங்கு தஞ்சோங் பூங்காவில் நடந்த நிலச்சரிவு சம்பவம் குறித்து, பிரதமர் நஜிப் தனது சோகத்தை வெளிபடுத்தினார்.
“தேடல் மற்றும் மீட்பு பணி நன்றாக செல்ல, நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்,” என்று அவர் தனது டுவிட்டர் வழியாகக் கூறினார்.
இன்று இரவு 8 மணிக்கு நிறுத்தப்பட்ட தேடும் பணிகள், மீண்டும் நாளை காலை தொடங்கும் என்று பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, ஜனநாயக செயற்கட்சியின் தலைமையில் இயங்கும் பினாங்கு அரசை, சில பாரிசான் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மலைப்பகுதியில் மேம்பாட்டுத் திட்டத்தைத் தடுக்கத் தவறிய மாநில அரசின் அலட்சியப் போக்கே, இந்த நிலச்சரிவு ஏற்படக் காரணம் என்று ம.இ.கா. பொருளாளர் எஸ். வேள்பாரி தெரிவித்துள்ளார்.
“மலையின் மீது கட்டுமானப் பணிகளை அனுமதித்த, மாநில அரசின் பொறுப்பின்மை அதிர்ச்சி அளிக்கிறது.”
“மலைகள் மீது மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வது அபாயகரமானது என்று மாநில அரசாங்கத்திற்குப் பலமுறை நினைவுறுத்தப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களின் அலட்சியப் போக்கினால், இந்த உயிர்பலி சம்பவம் நிகழ்ந்துள்ளது,” என்று வேள்பாரி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், அவரின் அலட்சியப் போக்கின் காரணமாக நிகழ்ந்துள்ள இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.”
“ஒருவேளை பினாங்கு மாநில அரசும் முதல்வரும், பினாங்கு மக்களின் வாழ்வில் அக்கறை இல்லாமல் இருக்கலாம் அல்லது அவர்கள் உயிரை மதிக்காமல் இருக்கலாம். ஆனால், நான் கவலைபடாமல், அமைதியாக இருக்க முடியாது,” என்று அவர் மேலும் கூறினார்.
பினாங்கு அம்னோ இளைஞர் தலைவர் ரபீஸல் அப்துல் ரஹிமும், இந்தச் சம்பவத்திற்கு லிம் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார்.
“பினாங்கு மாநில மக்களின் எச்சரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்டிருந்தால், இந்தச் சோகம் நடந்திருக்காது,” என்று ரபீஷல் கூறினார்.
இதற்கிடையே, பினாங்கு மாநிலக் கெராக்கான் துணைத் தலைவர் ஓ தோங் கியோங், எதிர்காலத்தில் இத்தகையச் சம்பவங்களைத் தவிர்க்க மாநில அரசு அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களையும் கவனிக்க வேண்டும் என்றார்.
இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளித்த, லிம்மின் மாநில அரசும் மாநகர மன்றமும் பினாங்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும், அதோடு, லிம் பினாங்கு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றார்.
14 பேர் புதையுண்ட அந்நிலச்சரிவு ஏற்பட்டதற்கான காரணத்தை அறிய, மாநில அரசாங்கம் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கவுள்ளதாக லிம் குவான் எங் கூறியுள்ளார்.
ஹா ஹா ஹா ஹா — எதிர்பார்த்ததே– இன்று காலையில் தான் இதைப்பற்றி கூறி இருந்தேன்.