தஞ்சோங் பூங்கா நிலச்சரிவில் தப்பித்த வங்காள தேசக் கட்டுமான தொழிலாளர்கள் சிலர் கண்ணிமைக்கும் நொடியில், ஏறக்குறைய ஒரு நிமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துவிட்டது என்று கூறியுள்ளனர்.
“சம்பவம் நிகழ்ந்தபோது நான், கீழ்த்தளத்தில் இரும்பைப் பொறுத்திகொண்டு இருந்தேன். இரும்பு எடுக்க நான் மேலே சென்றபோது, பெரும் சத்தத்துடன் மண் சரிந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன்.”
“ஒரு நிமிடம்தான், அதிவேகமாக…. கீழே இருந்த என் நண்பர்கள் 8 பேர் ஓடமுடியவில்லை. உயிருடன் இருக்கின்றனரா இல்லையா தெரியவில்லை,” என்று, அங்கு வேலை செய்துவந்த, 27 வயதான முகமட் ஜாசிம் ஹுசேன் அஹ்மாட் கூறினார்.
காலை மணி 8.57க்கு, செய்தி கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த, மீட்புப் பணிக்குழுவினர் இரவு 8 வரை தேடும் பணிகளில் ஈடுபட்டனர்.
சம்பவத்தைக் கேள்விபட்டு, பொதுமக்கள் அவ்விடத்தில் கூடிவிட்டதாக பெர்னாமா செய்திகள் கூறுகின்றன. அவ்விடத்தில் மக்கள் நுழைவதைத் தடுக்க, போலிசார் சுமார் 100 மீட்டர் தூரம் வரை பாதுகாப்பு கோடுகள் அமைத்துள்ளனர்.
சமீபத்தில் அங்கு வேலைக்குச் சேர்ந்த, 18 வயதான தனது தம்பி, முகமட் அப்துல் ரஹ்மான், இடிபாடுகளில் சிக்குண்டுள்ளதாக முகமட் அவால் ஜஃப்ரா அல்மா எனும் தொழிலாளி கூறினார்.
“8 மணிபோல நண்பர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்….. தம்பி உயிருடன்
இருக்கிறானா, இல்லையா என்று எனக்கு தெரியவில்லை ….. நான் இங்கேயே காத்திருந்து, என் தம்பியின் நிலையை தெரிந்துகொள்ள போகிறேன்,” என்றார் அவர்.
தற்போது, வங்காளதேச மருத்துவமனையில் இருக்கும் தன் பெற்றோரிடம் இதுபற்றி இன்னும் தெரிவிக்கவில்லை என்றும் முகமட் அவால் தெரிவித்தார்.
தான் வேலையில் நுழைந்த 10 நிமிடத்தில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக முகமட் பாச்சு, 30, கூறினார்.
“அப்போது நான் மேலே இரும்பு எடுக்க சென்றிருந்தேன், மிக வேகத்தில் மண் சரிவதைப் பார்த்தேன்…. மற்ற நண்பர்களால் தப்பிக்க முடியவில்லை,” என்று கூறிய பாச்சு, தன் உறவினர், நூர் அலாமும், 30, மண்சரிவில் சிக்கியுள்ளதாகக் கூறினார்.