கெராக்கான் தலைவர் கோ சூ கூன் அடுத்த பொதுத்தேர்தலில், நாடாளுமன்றத்துக்கோ சட்டமன்றத்துக்கோ போட்டியிட மாட்டார்.
இன்று கோலாலும்பூரில், கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கோ, கட்சியின் “இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கு” வாய்ப்பளிக்க அவ்வாறு முடிவெடுத்ததாகக் கூறினார்.
மேலும்,அது ‘மக்களுடன் ஒத்துப்போகும்’ கெராக்கானின் உருமாற்ற வியூகத்தின் ஒரு பகுதியுமாகும்.
“புதுப்பிக்கும் முயற்சியில் நானே முன்மாதிரியாக நடந்துகொள்ளப்போகிறேன். முதல் அடியை எடுத்து வைக்கப்போகிறேன்.
“எதிர்வரும் 13-வது பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்கோ சட்டமன்றத்துக்கோ வேட்பாளராக போட்டியிடப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்”, என்றவர் அறிவித்தார்.
பினாங்கு பிஎன் தலைவர் பொறுப்பிலிருந்தும் அவர் விலகிக்கொள்கிறாரா என்று வினவியதற்கு, “பிரதமரிடம் என் முடிவைத் தெரிவித்து விட்டேன்”, என்றார்.
அது என்ன முடிவு என்பதைத் தெரிவிக்க விரும்பாத கோ, மாநிலத் தலைவர்களை நியமனம் செய்யும் அதிகாரத்தை பிஎன் அமைப்புவிதிகள் பிஎன் உச்சமன்றத் தலைவருக்கு வழங்குவதாகக் கூறினார்.
“ நடைமுறைகளுக்கும் அமைப்புவிதிகளுக்கும் மதிப்பளிப்போம்”, என்றாரவர்.
மாநில கெராக்கனைப் பொறுத்தவரை பதவியில் இருக்கும் அனைவருமே கட்சித்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், எனவே அதில் எந்த மாற்றமும் தேர்தல் வழியாகத்தான் நடைபெற வேண்டும்.
பிரதமர்துறை அமைச்சராகவுள்ள கோ, தம் அமைச்சர் பதவியைப் பொறுத்தவரை பிரதமர்தான் முடிவுசெய்ய வேண்டும் என்றார்.
அழுத்தங்கள் காரணமாகத்தான் இம்முடிவுகளை எடுத்தாரா என்றும் வினவப்பட்டதற்கு இல்லை என்று பதிலிறுத்த கோ, “ நான் அழுத்தங்களுக்கு இடம் கொடுப்பதில்லை”, என்றார்.
கெராக்கான் காலம் தாழ்த்தித் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள முயல்வதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.
“(2008 பொதுத் தேர்தலுக்குப் பின்) மார்ச் பிற்பகுதியிலேயே கூட்டம் நடத்தினோம். மே மாதம் மூன்று வியூகங்களை வகுத்தோம்…எல்லாவற்றுக்கும்(நிரூபிக்க) ஆவணங்கள் உண்டு. எத்தனையோ தடங்கல்கள் வந்த போதிலும் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்”.
கெராக்கானின் உருமாற்றத்திட்டம் ஒரு மாத காலத்துக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கோ கூறினார்.
“கட்சி இயந்திரத்தை வலுப்படுத்தவும், கட்சி நன்கு விளம்பரப்படுத்தப்படுவதை ஒருங்கிணைக்கவும் என் நேரத்தையும் ஆற்றலையும் செலவிடப் போகிறேன்.
“நான் போட்டியிட ஒரு இடத்தைத் தேடுவதை விடுத்து கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெறப் பாடுபடுவேன்”, என்றாரவர்.
பினாங்கில், பாகான் தொகுதியில் முதலமைச்சர் லிம் குவான் எங்கை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்ற அறைகூவல்களுக்குச் செவி சாய்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் கோ குறிப்பிட்ட்டார்.
“அவரின் தந்தை(லிம் கிட் சியாங்)யை எதிர்த்து இரண்டு தடவை, 1986-லும், 1995-லும் போட்டியிட்டவன் நான்”.முதலில் தோற்றார், பின்னர் 1995-இல் வென்றார்.
“ஏழு தடவை தேர்தலில் நின்று விட்டேன்…..லிம் கிட் சியாங்கை இரண்டு முறை எதிர்த்துப் போட்டியிட்டவன் நான் மட்டுமே”, என்று கோ கூறினார்.