11 போலீஸ்காரர்களின் “தொல்லை”: எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தாம் 11 போலீஸ்காரர்களால் உடல் ரீதியான தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறும் வோங் பீ போங், 39, அது குறித்த நடவடிக்கைக்காக இன்னும் காத்திருப்பதாக கூறுகிறார்.

தாம் இன்று வரையில் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் அச்சம்பவம் குறித்து செய்த புகார் மீது புலன்விசாரணை நடத்தப்பட்டதா என்பது குறித்து எவ்வித பதிலும் போலீசார் அளிக்கத் தவறிவிட்டனர் என்று பீ போங் கூறினார்.

மாறாக, அவர் போலீசார் அவர்களுடையக் கடமையைச் செய்வதற்குத் தடையாக இருந்தார் என்று கூறப்பட்டு விசாரிக்கப்பட்டதாக அவருடைய வழக்குரைஞர் இன்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் கூட்டத்தில் பீ போங் கூறினார்.

2004 ஆண்டில், இரவு 1.55 க்கு தாமான் கானாட்டில் ஒரு வாகனப் போலீஸ் தடுப்பில் மது அருந்தியிருந்த சந்தேகத்தின் பேரில் நிறுத்தப்பட்டபோது தமக்கு ஏற்பட்ட கொடுமை தொடங்கியது என்று பீ போங் கூறினார்.

“நான் எனது ஓட்டுநர் உரிமத்தைத் திருப்பித் தருமாறும், சம்மன்ஸ் வழங்குமாறும் கேட்டேன். ஆனால், அந்த போலீஸ்காரர், ஜொகாரி இஸ்மாயில், அடையாள எண் 88147, அதைத் திருப்பிக் கொடுக்க மறுத்ததோடு ரிம3,000 இலஞ்சம் கொடுக்குமாறு கேட்டார்.

“நான் மறுத்து விட்டேன். அவர் என்னை 15 நிமிடங்களுக்குக் காக்க வைத்தார். ஏதோ நடக்கப்போகிறது என்று சந்தேகப்பட்டேன். அங்கிருந்து செராஸ் 9 ஆவது மைலில் இருக்கும் போலீஸ் நிலையத்தை நோக்கி எனது காரை ஓட்டினேன்”, என்று அவர் கூறினார்.

ஆனால், அவரின் இலக்கை அடைவதற்கு முன்பு அவரை ஒரு புரோடோன் வீரா விரட்டியதைத் தொடர்ந்து ஒன்பதாவது மைலிலுள்ள பிஜிஎ கட்டடத்திற்குள் நுழைய வேண்டியதாயிற்று.

“துரத்தி வருபவர்களை உள்ளே நுழையவிடாமல் தடுப்பதற்காக இரு காவலாளிகள் வாயிலை உடனடியாக மூடினர். ஆனால் போலீஸ் சீருடை அணிந்திருந்த நால்வர் இறங்கி வந்து வளாகத்தினுள் நுழைந்தனர்”, என்று பீ போங் மேலும் கூறினார்.

 

“அவர்கள் சிரித்தனர், நான் அழுதேன், கூச்சலிட்டேன்”

நொடி நேரத்தில், ஜொகாரி உட்பட போலீஸ் சீருடையிலிருந்த 11 போலீசார் அவரைச் சூழ்ந்து கொண்டு காரிலிருந்து வெளியே வருமாறு காரைத் தாக்கினர் என்றார்.

“அவர்கள் தங்களுடைய அடையாள அட்டை வெகு வேகத்தில் காட்டியதால் அவற்றை என்னால் படிக்க இயலவில்லை. அவர்கள் போலீயானவர்களாக இருக்கலாம் என்று சந்தேகித்ததால் நான் 999 எண்ணை அழைத்து ஓர் இன்ஸ்பெக்டரை அனுப்புமாறு கேட்டுக்கொண்டேன்”, என்று பீ போங் மேலும் கூறினார்.

இச்சம்பவத்தின்போது அங்கிருந்த தமது முதலாளி எஸ்பி சானுடன் பேசியவுடன் பீ போங் காரின் கதவைத் திறக்க தீர்மானித்தார்.

கதவைத் திறந்து இறங்கிய அக்கணமே அந்த மனிதர்கள் அவரை இழுத்துப்பிடித்து “தழுவத்” தொடங்கினர்.

“அவர்கள் என்னை எல்லா இடங்களிலும் தொட்டனர். பெண்ணான எனது முதல் எதிர்நடவடிக்கை, அவர்களைத் உதறித் தள்ளிவிட்டு, நிறுத்துமாறும் கூறினேன். நான் அழுது கொண்டு கூச்சலிட்டேன். ஆனால் அவர்கள் சிரித்துக்கொண்டே எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தனர்.

“இன்ஸ்பெக்டர் எட்வர்ட் என்பவர் வந்து சேரும் வரையில் இது தொடர்ந்தது. நிறுத்தும்படி அவர் உத்தரவிட்டார். அதன் பின்னரும் அவர்கள் தொடர்ந்து என்னைச் சுற்றி நின்றுகொண்டு சிரித்துக் கொண்டிருந்தனர்”, என்று பீ போங் தொடர்ந்து கூறினார்.

அச்செய்தியாளர் கூட்டத்தில் இருந்த சான், போலீசார் தன்னைத் தள்ளி விட்டதாகக் கூறியதோடு போலீசார் எப்படி “தங்களுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினர்” என்பதைக் கண்டதாக கூறினார்.

“அவர்களில் பலர் அங்கு இருந்தனர். ஆனால் தனிமையிலான ஒரு பெண்ணான” அவர் தன்னைத் தற்காத்துக் கொள்வதிலிருந்து  எப்படி தடுக்கப்பட்டார் என்பதை சைகையோடு சான் கூறினார்.

பின்னர், பீ போங் மற்றும் சான் ஆகிய இருவரும் ஜாலான் பண்டார் போலீஸ் நிலைத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பீ போங் சிறுநீர் சோதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அவரை மலூரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ஒரு முகப்பில் உட்கார வைக்கப்பட்டார்.

“எதற்கு என்று எனக்குத் தெரியாது. அங்கிருந்த ஒரு பெண் போலீஸ்காரர் என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ளாமல்கூட (கைது செய்யப்படுவதற்குமுன்) பெரிய கூச்சல் போட்டதற்கு எனக்கு ஏன் ஓர் அறை கொடுக்கவில்லை என்று ஜொகாரியிடம் கேட்டார்”, என்று பீ போங் கூறினார்.

அதன் பின்னர், அவரை செராஸ் 9 ஆவது மைல் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு போலீசார் அவர்களுடைய கடமையைச் செய்வதற்கு தடையாக இருந்தது பற்றி விசாரிப்பதற்காக அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

மேற்கொண்டு எந்த விசாரணை செய்யாமலும் கேள்விகள் கேட்காமலும் காலை மணி 11.00 அளவில் பீ போனும் சானும் விடுவிக்கப்பட்டனர்.

 

போலீசாரின் மௌனம்

அவர் நடத்தப்பட்ட முறையால் வருத்தமடைந்திருந்த பீ போங் செராஸ் 9 ஆவது மைல் போலீஸ் நிலையத்தில் அடுத்த நாள் ஒரு புகார் செய்தார். பிறகு, அவரது புகார் குறித்து விசாரணை ஏதும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள இரு முறை அங்கு சென்றார்.

“முதல் முறை நான் அங்கு சென்றபோது, போலீசார் எனது புகாரை பதிந்து கொண்டு குற்றச்சாட்டு ஏதேனும் சுமத்தப்படும் என்றால் நீதிமன்றம் எனக்கு அழைப்பு விடுக்கும் என்று கூறினார். ஆனால், எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

“மீண்டும் சென்றபோது, போலீசார் என்னை ஒரு மூலையில் நிறுத்தி விட்டனர். என்னுடைய கேள்வி குறித்து எதுவும் செய்யவில்லை”, என்றாரவர்.

அவர் முதலில் நியமித்திருந்த வழக்குரைஞரிடமிருந்து எவ்வித முன்னேற்றத்தையும் காணாததால், கெப்பி வோங் என்ற வழக்குரைஞரை இம்மாதம் நியமித்துள்ளார்.

ஆகஸ்ட் 11 இல், இவ்விவகாரம் குறித்து சட்டத்துறை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றும் கெப்பி கூறினார்.

“(பீ போங்) அவருக்கு மறுமொழி பெறும் உரிமை உண்டு. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்படுமா என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும்”, என்று கெப்பி கூறினார்.

சம்பவம் நாளிலிருந்து இன்றுவரையில் தாம் அதிர்சியில் இருப்பதாகவும், இரவில் வெளியில் செல்வதற்கு அச்சப்படுவதாகவும், அப்படியே குடும்பத்தினருடன் வெளியில் சென்றால்கூட இருட்டுவதற்கு முன்பே திரும்பிவிட வேண்டும் என்ற கட்டாய நிலையில் இருப்பதாகவும் பீ போங் கூறினார்.

மேலும், சம்பவம் நடந்த நாளிலிருந்து போலீசாரை, பெண் போலீசார் உட்பட, கண்டால் திகிலடைவதாக அவர் கூறினார்.

காஜாங் ஒசிபிடி எசிபி அப்துல் ரஷிட் வாகப்பை மலேசியாகினி தொடர்பு கொண்டபோது பீ போங்கை சந்தித்து “அவரது பிரச்னையைத் தீர்க்க முயற்சி செய்வேன்”, என்று கூறினார்.

“அவர் என்னுடன் விரைவில் தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்”, என்று கூறிய அவர், மாவட்ட தலைவராக பதவி ஏற்பதற்கு முன்பு இச்சம்பவம் நடந்துள்ளதால் தமக்கு கூடுதல் தகவல் தேவைப்படுகிறது என்று மேலும் கூறினார்.