சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி, வலைப்பதிவர் ராஜா பெட்ரா கமருடினுக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளார்.
மலேசியாகினி அபாண்டியைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது மூன்று நாள்களுக்கு முன்பு புகார் செய்ததாகக் கூறினார்.
“கிறிமினல் அவதூறுக்காக புகார் செய்தேன்”, என்றாரவர். மேல்விவரம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.
ஆர்பிகே என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் ராஜா பெட்ரா எழுதிய “ஏஜி தொடர்பில் வலுவான வதந்திகள்” என்ற கட்டுரையில் அபாண்டி கூட்டரசு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியபோது ஊழலில் ஈடுபட்டார் என்று கூறப்பட்டுள்ளதாம்.
இரண்டு நாள்களுக்கு முன்னதாக ஆர்பிகேக்கு எதிராக அபாண்டி வழக்கு தொடுப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தாம் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதை மறுத்த அபாண்டி அது “பொய்யான செய்தி” என்றார்.
“எல்லாம் அபத்தம். என் பெயரைக் கெடுக்கும் செயல். எழுதியவரை விடப்போவதில்லை, வழக்கு தொடுப்பேன்.
“வழக்கு தொடுக்கப்போவது உண்மை. யுனைடெட் கிங்டமில் உள்ள நண்பர்களையும் என் வழக்குரைஞரையும் கலந்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறேன். இது தீய நோக்கத்துடன் சொல்லப்பட்ட ஒரு பொய்யான செய்தி”, என்று ஏஜி கூறியதாக த ஸ்டார் அறிவித்துள்ளது.