மற்ற நாட்டு நாணயங்களைவிட ரிங்கிட் நல்ல அடைவுநிலை கண்டிருப்பதாகக் கூறிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை பெட்டாலிங் ஜெயா எம்பி டோனி புவா சாடியுள்ளார்.
நஜிப் பிரதமராக பொறுப்பேற்றபோது ரிங்கிட்டின் மதிப்பு ஒரு டாலருக்கு ரிம3.58 என்றிருந்ததை புவா நினைவூட்டினார்.
இன்று டாலருக்கு ரிம4.24 என்று ரிங்கிட் மதிப்பு சரிவடைந்துள்ளது.
“உண்மையைச் சொல்லப்போனால், 2013 பொதுத் தேர்தலிலிருந்து ரிங்கிட் ஆண்டுதோறும் சரிவுகண்டு வந்துள்ளது.
2015-இல் எண்ணெய் விலை இறக்கம் கண்டபோது ரிங்கிட்டின் மதிப்பு அதற்கு முந்திய ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்தது.
அப்போது நஜிப், ரிங்கிட்டின் மதிப்பு மீண்டும் உயர்வது திண்ணம் என்று உறுதி கூறினார்.
ஆனால், 2015-இலும் 2016-இலும் ரிங்கிட்டின் சரிவுதான் தொடர்ந்தது.
“டாலருக்கு எதிராக மற்ற நாட்டு நாணயங்களும் ரிங்கிட்டின் அளவுக்குச் சரிவு கண்டிருந்தால் பாதிப்பு அவ்வளவு மோசமாக இருந்திருக்காது.
“வட்டாரத்தின் முக்கிய நாணயங்களுடன் ஒப்பிட்டால் ரிங்கிட்டின் அடைவுநிலைதான் மிக மோசமாக உள்ளது.
“ஹாங்காங், சிங்கப்பூர் டாலர், தாய்லாந்தின் பாஹ்ட், இந்தோனேசியாவின் ரூபியா, சீனாவின் யுவான், இன்னும் பல நாணயங்களூக்கு எதிராகவும் நம்முடைய ரிங்கிட் பலவீனமடைந்திருக்கிறது.
ஆனால், பிரதமரோ ரிங்கிட்டின் மதிப்பு சிறிதளவு முன்னேற்றம் கண்டிருப்பதைச் சுட்டிக்காட்டிக் குதூகலிக்கிறார்”, என்றாரவர்.
இதைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் நஜிப்பும் அவரின் ஆதரவாளர்களும் 1எம்டிபி போன்ற சர்ச்சைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்கு முயல்கிறார்கள்.
“நஜிப் ரிங்கிட்டில் ஏற்பட்டுள்ள குறுகிய-கால முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டி பெரிய விவகாரங்களிலிருந்து நம்முடைய கவனத்தைத் திருப்ப நாம் ஒருபோதும் அனுமதியோம்.
“டாலருக்கு ரிம3 என்ற நிலைக்கு ரிங்கிட்டின் மதிப்பை மீண்டும் கொண்டுவர வேண்டுமானால் அதற்கு ஒரே வழிதான் உண்டு. கொள்ளைக்கார நிர்வாகத்தை ஒழித்து அதனிடத்தில் மலேசியாவின்மீது உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை வர தூய்மையானதும் வெளிப்படைத்தன்மையும் போட்டிகரமான பொருளாதாரக் கொள்கைகளையும் கொண்ட ஒரு நிர்வாகத்தை அமர்த்த வேண்டும்”, என புவா கூறினார்.