இல்லாத ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு, தேர்தல் நடவடிக்கை அறையைத் தொடங்கியிருக்கும் சிலாங்கூர் மாநில பாரிசான் நேசனலின் செயல் தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக பெர்சே 2.0 இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை, சிலாங்கூர் மாநில பாரிசான் தலைவர் நோ ஓமார், ‘P107 சுங்கை பூலோ’ நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் நடவடிக்கை அறையை அறிவித்தப் பின்னர், அதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டுமென பெர்சே 2.0-ன், செயலதிகாரி மண்டிப் சிங் கேட்டுக்கொண்டார்.
“இந்த அறிவிப்பு பாரிசான் மற்றும் நோ ஓமாரின் அகந்தையைக் காட்டுகிறது, சிலாங்கூர் மாநில எல்லை மீள்திருத்த வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் இருக்கும்போது, இவர்களின் செயல் நீதிமன்றத்தை அவமதிப்பது போல் உள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, தேர்தல் ஆணையத்தின் தொகுதி வரையறை அரசியலமைப்பு சட்டப்படி தவறானது மற்றும் சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி, சிலாங்கூர் அரசாங்கம் செய்த விண்ணப்பத்திற்கு, டிசம்பர் 7-ம் தேதி தீர்ப்பு கூறவுள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி அசீசுல் அஸ்மி அட்னான் அறிவித்தார்.
கடந்தாண்டு, அக்டோபர் 19-ல், தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமட் ஹசிம் அப்துல்லா மற்றும் செயலாளர் அப்துல் கானி சாலே இருவருக்கும் எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இச்செயல் தங்களுக்கு வருத்தமளிப்பதாக மண்டீப் கூறினார். அதோடு மட்டுமின்றி, குறிப்பிட்ட ஒருசில அரசியல் கட்சிகளுக்குச் சாதகமாக விளங்கும் இந்தச் சீரற்ற எல்லை வரையறையை வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“இது கண்காணிக்கப்படவில்லை எனில், நியாயமற்ற எல்லை வரைமுறை, பொதுத் தேர்தலையும் தூய்மையற்றதாக நேர்மையற்றதாக ஆக்கிவிடும்,” என்று அவர் கூறினார்.
பெர்சே 2.0 தேர்தல் ஆணையத்திடம் 3 கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது. அவை :-
- பி.என். மற்றும் நோ ஓமார் சுங்கை பூலோ தேர்தல் நடவடிக்கை அறையை மீண்டும் பெற்றுக்கொள்ள வலியுறுத்த வேண்டும்
- அனைத்து அரசியல் கட்சிகள், குறிப்பாக பி.என்.-னிடம் எல்லை வரையறை செயல்முறையை மதிக்க வேண்டுமென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
- அரசிதழ் பதிவுபெறாத அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடவடிக்கை அறை தொடங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இவ்வாறு மண்டீப் சிங், இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.