பட்ஜெட் 2018: தமது அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து, குறிப்பாக சீனாவிலிருந்து, மூலதனம் பெற்றதை குறைகூறியவர்களை பிரதமர் நஜிப் அவரது பட்ஜெட் உரையில் சாடினார்.
அவரது இலக்கு சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி மற்றும் பினாங்கின் குவான் எங் ஆவர்.
சமீபத்தில் நஜிப்புக்கு ஒரு செய்தி கிடைத்ததாம். அதன்படி, சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி சீனாவுக்கு சென்றிருந்தாராம். சிலாங்கூரை சீனாவுக்கு விற்கச் சென்றாரா என்று நஜிப் கேட்டார்.
அவ்வாறே, குவான் எங்கும் அதைத்தான் கடந்த ஆண்டு செய்தார் என்று கூறிய நஜிப், மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பினால் அது எங்கு விழும் என்பதை ஞாபகப்படுத்தினார்.
சீனா, அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு தாம் மேற்கொண்ட பயணங்களின் விளைவாக அந்நாடுகளுடனான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள் வலுவடைந்துள்ளன என்றாரவர்.
இப்பயணங்களினால் மலேசியாவில் தனியார் மூலதனம் 2009-2016 ஆண்டுகளுக்கிடையில் ரிம81 பில்லியனிலிருந்து ரிம211 பில்லியனுக்கு உயர்வு கண்டுள்ளது பிரதமர் நஜிப் கூறினார்.
“ஆகவே, நான் அல்லது எனது அமைச்சரவை உறுப்பினர்கள் வெளிநாட்டிற்கு அதிகாரப்பூர்வமான பயணங்கள் மேற்கொண்டிருந்தால், அது நாட்டின் இறையாண்மையை பலவீனப்படுத்துகிறது என்று வெறுமனே கூறாதீர்கள் என்றாரவர்.
ஜோ லோவைத் தேடிப் போனேன்
நஜிப்பின் வசைப்பாட்டிற்கு அஸ்மினும் குவான் எங்கும் டிவிட்டரில் நகைச்சுவையோடு பதில் அளித்தனர்.
“அன்புள்ள நஜிப், நான் சீனாவுக்கு போனது ஜோ லோவைக் (1எம்டிபி சம்பந்தப்பட்ட) கண்டுபிடிக்க, ஹாஹாஹா” என்று அஸ்மின் டிவிட் செய்தார்.
குவான் எங் அவரது டிவிட்டில், நான் யுஎஸ்க்கு போனது மூலதனங்களைப் பெறுவதற்காக, தொழிலாளர்கள் சேமநிதியிலிருந்து (இபிஎப்) யுஎஸ்$4 பில்லியன் அமெரிக்காவுக்கு கொடுப்பதற்காக அல்ல என்று கூறினார்.