கஸ்தூரி பட்டு : மலேசியாவில் இசா சட்டம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது

‘ஒப்பராசி லாலாங்’ முடிந்து 35 ஆண்டுகள் கடந்த பின்பும், உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் (இசா) ‘ஆவி’, தடுப்புக்காவல் சட்ட அமலாக்கத்தின் உருவில் இன்னும் நாட்டில் உயிரோடுதான் இருக்கிறது என்று, பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு இன்று தெரிவித்தார்.

பிரதமர் நஜிப் ரசாக் இசா சட்டத்தை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், பல சட்டங்களைத் திருத்தி அமைத்ததுடன், சில புதிய சட்டங்களை அவரது நிர்வாகத்தின் கீழ் அறிமுகப்படுத்தியது, மத்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்திவிட்டது என்றார் அவர்.

‘மலேசியா சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது’ என்ற சிலரின் கருத்துகள், தவறான எண்ணங்களை உருவாக்கியுள்ளன எனும் நஜிப்பின் சமீபத்திய கூற்றையும் அவர் குறைகூறினார்.

“பிரதமர் தெளிவில்லாமல் இருக்கிறார், சர்வாதிகார சட்டங்கள், சர்வாதிகார தலைமைத்துவத்தில் இயங்கும், சர்வாதிகார அரசாங்கத்தைப் பிரதிபலிக்கிறது. ஆக, இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை,” என்று 30-ம் ஆண்டு ஓப்பராசி லாலாங் நிறைவை நினைவுகூரும் ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

இத்தகைய சட்டங்களைப் புதுப்பித்து, ‘அரசியல் துன்புறுத்தலின் பேய்களை உயிர்ப்பிக்க’ , ‘ஓப்பராசி லாலாங் பிணங்களைத் தோண்டியெடுக்க’ அவர் விரும்புகிறார், என்று கஸ்தூரி தெரிவித்தார்.

இந்தப் பட்டியலில் முதலில் இருப்பது அமைதி பேரணி சட்டம், நவம்பர் 29, 2011-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அடுத்த வருடமே அமலுக்கு வந்தது. அதன் பின்னர், தேசியப் பாதுகாப்பு சட்டம் (சிறப்பு பிரிவு) (சோஸ்மா) 2012-ல் விவாதிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டது, மீண்டும் 2017-ல் திருத்தம் செய்யப்பட்டது, என்றார் அவர்.

2015-ஆம் ஆண்டில், குற்றவியல் தடுப்புச் சட்டம் (போகா) திருத்தம் செய்யப்பட்டு,  பயங்கரவாத தடுப்பு சட்டமாக அறிமுகம் கண்டது. 2016-ஆம் ஆண்டில், தேசிய பாதுகாப்பு கவுன்சில் சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டதையும் கஸ்தூரி சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் மற்றும் முயற்சிக்கும் குற்றவியல் சட்டங்கள் பிரிவு 124B, பிரிவு 124C, நாடாளுமன்ற ஜனநாயகத்தை அச்சுறுத்தும் ‘ஆவணங்கள் மற்றும் வெளியீடுகளின் அச்சிடுதல், விற்பனை செய்தல்’ போன்றவற்றை உள்ளடக்கிய பிரிவு 124D, ‘ஆவணங்கள் மற்றும் வெளியீடுகளை வைத்திருப்பது’ பிரிவு 124E,  ஆகியவற்றையும் மறந்துவிடக்கூடாது,” என்றார் அவர்.

‘போகா’ மற்றும் ‘சோஸ்மா’, விசாரணை இல்லாத, குறுகிய கால தடுப்புக்காவலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் 124B பிரிவு மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் சட்டம் பிரதமருக்குச் சர்வாதிகார, நிர்வாக, அவசர அதிகாரங்களை கொடுக்கிறது, ஆக இது நிச்சயமாக அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

‘சட்டத்தின் முன் விசாரணை செய்யப்பட வேண்டும்’ என்ற உரிமை மறுப்பு, கேட்கும் உரிமை மற்றும் இயற்கை நீதிக்கான அடிப்படை உரிமை என அனைத்தும் மறுக்கப்படுவது இதில் தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

“ஓப்பராசி லாலாங் 1987-ல், இயல்பான மாற்றங்களைச் செய்து, அதனை அழித்துவிட்டதாக உலகிற்குக் காட்டி, புத்திசாலித்தனமாக செயல்படுவதா பாரிசான் நேஷனல் அரசாங்கம் நினைக்கிறது. ஆனால், அதில் அவர்களின் அரசியல் முதிர்ச்சியின்மையையேக் காணமுடிகிறது,” என்றும் கஸ்தூரி கூறினார்.

அக்டோபர் 27, 1987-ல் நடந்த ஓப்பராசி லாலாங் நடவடிக்கையில் அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்த சமூக ஆர்வளர்கள், மாணவர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், மத போதகர்கள், கலைஞர்கள் என 106 பேர் இசா சட்டத்தின் கீழ், விசாரணை இல்லாமல் தடுத்துவைக்கப்பட்டனர்.

ஜூலை 2012-ல், நீக்கப்பட்ட இசா சட்டம், விசாரணையின்றி தடுத்து வைக்கவும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் ஆளும் அரசாங்கத்தால் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.