சுகாதாரச் சேவைகளுக்கான ஜி.எஸ்.டி. அகற்றப்படவில்லை, மருத்துவர்கள் ஏமாற்றம்

மலேசிய மருத்துவச் சங்கம் (எம்.எம்.ஏ.) சுகாதார சேவைகளுக்கு வரி விலக்கு தரவேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும், இன்னமும் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவது தொடர்பில் சுகாதார நிபுணர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மற்ற துறைகளுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளித்த பிரதமர் நஜிப், சுகாதார துறைக்கான வரியை அகற்றாததது ஏமாற்றம் அளிப்பதாக, எம்.எம்.ஏ.-வின் தலைவர் டாக்டர் ரவீந்திரன் நாயுடு தெரிவித்தார்.

“பிரதமரிடம் நாங்கள் எங்களது கோரிக்கைகளைச் சமர்ப்பித்தபோது, முக்கியப் பிரச்சனையாக, மக்களுக்குச் சுமையாக இருக்கும், அடிப்படை சேவையான சுகாதார பாதுகாப்புக்கான ஜி.எஸ்.டி.-ஐ அகற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டோம். ஆனால், அவர் அதற்குச் செவிசாய்க்காதது, ஏமாற்றமளிக்கிறது,” என்று ஃப்.எம்.தி.-யிடம் அவர் கூறினார்.

கூடுதலாக 2 பில்லியன் , ஆனால் அது குறைக்கப்படாமல் இருக்க வேண்டும்

2018-ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில், 27 பில்லியன் ரிங்கிட்டைச் சுகாதாரச் சேவைக்கு ஒதுக்கியுள்ளதாக பிரதமர் நேற்று அறிவித்தார். 2017-ல், 25 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, மருந்துகள், நுகர்பொருட்கள் மற்றும் தடுப்பூசிகளுக்காக, அனைத்து அரசாங்க மருத்துவமனைகளுக்கும் 4 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.

ஒட்டுமொத்த சுகாதார நலனுக்காக 2 பில்லியன் ரிங்கிட் அதிகரிப்பட்டிருப்பதை ரவீந்திரன் வரவேற்றார், ஆனால், அதேசமயம் எதிர்காலத்தில் அது குறைக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“கடந்த ஆண்டு அரசாங்கம் 25 பில்லியன் ரிங்கிட்டை, சுகாதாரப் பராமரிப்புக்காக ஒதுக்கீடு செய்தது. ஆனால், பின்னர் அந்த ஒதுக்கீட்டில் சிலவற்றை குறைத்துகொண்டனர். அரசாங்கம் மீண்டும் அவ்வாறு செய்தால், நாங்கள் பழைய நிலைக்கே செல்ல வேண்டியிருக்கும்,” என்று அவர் கூறினார்.

மருத்துவப் பொருட்கள் மற்றும் நுகர்பொருட்களுக்கு 100 மில்லியன் ரிங்கிட் போதுமானது, ஆனால் அவர்கள் அதை குறைக்காமல் இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

“இதுவும் அரசாங்க மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையையும் நிலைமையும் சார்ந்துள்ளது. நோயாளிகள் அதிகரிக்கும் போது இது போதாது,” என்றார் ரவீந்திரன்.

 

வெளிநோயாளிகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது

 

மருந்துகள், நுகர்பொருட்கள், தடுப்பூசிகள் மற்றும் மீளுருவாக்கத்திற்கான (regen) ஒதுக்கீட்டில் மாற்றம் இல்லாமல் இருப்பது அதிர்ச்சியளிப்பதாக, சுகாதார மற்றும் சமூகக் கொள்கைக்கான கலென் சென்டரின் தலைமை நிர்வாகி, அஸ்ருல் முகமட் காலிப் தெரிவித்தார்.

“அரசாங்கம் இதுதொடர்பாகப் பேசியிருந்தும், ஒதுக்கீட்டில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யவில்லை. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016-ஆம் ஆண்டில், 10 மில்லியனுக்கும் அதிகமான் வெளிநோயாளிகள் அரசாங்க மருத்துவமனைகளை நாடியுள்ளனர். இந்த ஆண்டு, இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,”  என்றார் அவர்.

“ஆக, நிலைமை மோசமாக இருப்பதால், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்குச் சிகிச்சையளிக்க அடிப்படை மருந்துகளின் பற்றாக்குறை ஏற்படும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

“இதனால், பலவீனமானவர்கள் என்று கருதப்படும் மூத்த குடிமக்கள், பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவர்.”

தன்னார்வ சுகாதார காப்பீடு திட்டத்தை அமைப்பதற்காக 50 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்திருப்பது ஒரு தைரியமான நடவடிக்கை என்று அஸ்ருல் தெரிவித்தார்.

“சுகாதார சீர்திருத்தம் மற்றும் சுகாதார மாற்றத்திற்கான ஒரு சீரான சூழலை உருவாக்க, சுகாதார நிதியை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு இது ஓர் அடையாளம் ஆகும்,” என்றார் அவர்.

அரிய நோய்களுக்கு மானியம்

அரிய நோய்களுக்கு மானியம் வழங்கும் நாடுகளுள், மலேசியாவும் ஒன்று என்று அசுருல் தெரிவித்தார்.

“நமக்கு நோய்களைக் கண்டறியும், மிகவும் மலிவுவான சேவைகள் தேவை. தற்போது, சிறந்த வசதிகள் மற்றும் நிபுணத்துவம் இல்லாததால், மரபணு பரிசோதனைகள் மற்றும் மாதிரிகள் பெரும்பாலும் வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவதால், அதிக விலை கொடுக்க வேண்டியதாக உள்ளது. அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமையால், நோயாளிகள் அரசாங்க உதவிகளையும் மற்றும் சேவைகளையும் பெறுவதில்லை.”

“வரவு-செலவுத் திட்டத்தில் அரிய நோய்களுக்கான பாதுகாப்பையும் சேர்த்துகொண்டால்,  அரசாங்கம் அவற்றில் அதிக கவனம் செலுத்தி, பரிசீலிக்கும் என்று நான் நம்புகிறேன். சுகாதார அமைச்சை வடிவமைக்கவும், மருந்துப் பொருள்களுக்கான உதவித் திட்டங்களை ஆதரிக்கவும் இவை வழிவகுக்கும்,” என்றும் அஸ்ருல் கூறியுள்ளார்.