பட்ஜெட் 2018 : எதிர்க்கட்சியினர் என்ன சொல்கின்றனர்?

நேற்று, நாடாளுமன்றத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தாக்கல் செய்த, 2018-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், 260.8 பில்லியன் ரிங்கிட்டில் இருந்து 280.25 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது.

மேலாண்மை செலவினங்களுக்காக 234.25 பில்லியன், அபிவிருத்தி திட்டங்களுக்கான செலவினங்களுக்கு  46 பில்லியன் மற்றும் கையிறுப்பு சேமிப்புக்காக 2 பில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பட்ஜெட் 2018 பற்றி எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்து என்ன? மலேசியாகினி சேகரித்த சில கருத்துகள் இங்கே:

பி.கே.ஆர். தலைவர், டாக்டர் வான் அசிஷா வான் இஸ்மாயில் :

“நமது நாட்டில் ஊழல் மற்றும் வீண் செலவினங்களை நாம் அழிக்க வேண்டும், அதுதான் மிக முக்கியம். நீங்கள் பலவிதமான பரிசுகளைக் கொடுக்க முடியும், ஆனால், நிதி நிர்வாகத்தில் இருக்கும் நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

2018-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் குறித்து, ஒட்டுமொத்த கருத்தைக் கேட்டபோது, “அது ஒரு நாடகம்,” என்று வான் அசிஷா கூறினார்.

டிஏபி தலைமைச் செயலாளர், லிம் குவான் எங் :

“2018 வரவு செலவுத் திட்டத்தில், ஜிஎஸ்டியை ஒழிக்கப் போவதாக , நஜிப் அறிவித்திருந்தால், எங்கள் (பக்காத்தான் ஹராப்பான்) நம்பிக்கையை அழித்திருப்பார். ஜி.எஸ்.டி. அகற்றப்பட்டால், அடுத்த பொதுத் தேர்தலில், பிஎன் பெரும்பான்மையில் வெற்றிபெறும் என்பது உறுதி.

“சில மாநிலங்களில் டோல் சாவடிகள் அகற்றப்படும் என்று அவர் அறிவித்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், பழைய சாலைகளில் ஒன்றான, பினாங்கு பால டோல் சாவடியை அகற்றாததில் எனக்கு ஏமாற்றமே.”

“மலேசியர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கையைப் பாதிக்கும் ஜிஎஸ்டி இன்னும் அகற்றப்படாமல் இருப்பது மிக முக்கியமான பிரச்சினையாகும். சிங்கப்பூர் ஜிஎஸ்டி-ஐ அறிமுகப்படுத்தியபோது, 3 விழுக்காடாக இருந்தது, இப்போதுதான் அது 7 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றிபெற்றால், ஜி.எஸ்.டி தொடர்ந்து செயல்படுத்தப்படும். அதுமட்டுமின்றி, 3 அல்லது 4 ஆண்டுகளுக்குப் பின்னர், அது 6 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரிக்கவும் வாய்ப்பும் உள்ளது என்று நாங்கள் கருதுகிறோம்.

“மக்கள் அதைப் பற்றி அறிவார்கள். பி.என்.-னுக்கு வாக்களித்தால், எதிர்காலத்தில் ஜி.எஸ்.டி. உயரலாம். ”

பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சி தலைவர், முஹிடின் யாஸ்சின்

“மக்கள் மனங்களை ஈர்ப்பதற்காக கொடுக்கப்படும் ‘சாக்லேட்’ இதுவென்று நாங்கள் அறிவோம். இது நிலையானதுதானா என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை.”

“அடுத்த ஒரு வருடக் காலத்திற்கு மட்டும் அல்லாது, இன்னும் பல ஆண்டுகளுக்கு மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தைக் காண நாங்கள் விரும்புகிறோம்.”

“அதற்கான முயற்சிகள் எதனையும் நான் இந்த பட்ஜெட்டில் பார்க்கவில்லை. இது வாக்காளர்களை ஈர்ப்பதிலேயே குறியானதாக இருக்கிறது. மெகா திட்டங்கள் இன்னும் இருப்பதை நான் காண்கிறேன், சில செலவுகளின் எண்ணிக்கை கூறப்பட்டது, சில கூறப்படவில்லை, அதில் எவ்வளவு பண பட்டுவாடா உண்டோ தெரியவில்லை.”

“இந்த வரவு செலவுத் திட்டத்திற்கான பணம் எங்கிருந்து வரப்போகிறது என்பது பற்றியும் நான் கவலைப்படுகிறேன். நிதி ஒதுக்கீட்டிற்குப் போதுமான அளவு பணம் அரசாங்கத்தில் உள்ளதா ….. இது வரவு செலவுத் திட்டத்தில்  குறிப்பிடப்படவில்லை, முந்தைய கடன்களின் காரணமாக அரசாங்கம் செலுத்த வேண்டிய வட்டி முதலானவை, இதில் சேர்க்கப்படவில்லை.”

“என்னைப் பொறுத்தவரை இது ஒரு விவேகமற்ற பட்ஜெட். மக்களின் வாழ்க்கை செலவுகள், பொருள்களின் விலை உயர்வு மற்றும் ஜிஎஸ்டி இன்னும் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. இன்னமும்  மக்கள்  அதிக சுமையைச் சுமக்கிறார்கள்.

“இது யதார்த்தமான பட்ஜெட் அல்ல. மிகப் பெரிய  பொறுப்பு, ஆனால், அதற்கு ஈடாக அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கப்படவில்லை.”

புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர், இட்ரிஸ் அஹ்மட் :

“டோல் சாவடியை அகற்றியது நல்லது, நாங்கள் உண்மையில் அதை விரும்புகிறோம். அதோடு, கிளாந்தான் நெடுஞ்சாலை மேம்படுத்தப்பட வேண்டும்.

“நாட்டின் மேம்பாடு மற்றும் மேலாண்மைக்கான ஒதுக்கீடு, பட்ஜெட்டில் சீரானதாக இருக்க வேண்டும், அல்லது 60% – 40%, ஆனால், 2018 பட்ஜெட்டில் மேலாண்மை செலவினங்களுக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.”

காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. மணிவண்ணன்

“இந்திய சமூகத்தின் இதயங்களை வெல்வதற்கான ஒரு வரவுசெலவுத் திட்டமாகும். 60-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற இடங்களின் வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இந்தியர்களின் வாக்குகள்தான் என்பதை அவர் (நஜிப்) நன்கு அறிவார்.”

“இந்தியர்களின் ஓட்டுகளை ஈர்ப்பதற்காக, ‘நாளை நமதே’ என்ற வார்த்தையை அவர் வெளிப்படுத்தினார். 2013-ல், இந்தியர் வாக்குகளை வெல்ல ‘நம்பிக்கை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார், ஆனால், குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் அதனால் ஏற்படவில்லை.

“இந்தியர்கள் இன்று அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு அடிப்படை மாற்றங்களைக் காண விரும்புகின்றனர்.”