மூன்று ரெலா உறுப்பினர்கள் ஒரு “டத்தோஶ்ரீ”யால் தாக்கப்பட்டனர்

 

நேற்று, ஜாலான் அம்பாங்கிலுள்ள ஒரு கோயிலில் ஒரு டத்தோஶ்ரீ மூன்று ரெலா உறுப்பினர்களைத் தாக்கியுள்ளார்.

இச்சம்பவம் காலை மணி 6.30 அளவில் நிகழ்ந்தது. இதனால் மெல்வின் சியோங் முன் காய்,19, லீ வெங் போ, 27, மற்றும் லியோங் ஜியுன் ஜி, 21, ஆகிய மூவருக்கும் தலை, கண் மற்றும் வயிறு ஆகிய இடங்களின் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சாலை போக்குவரத்துக்கு தடங்களாக இருக்கிறது என்பதால், அந்த டத்தோஶ்ரீயிடம் அவருடைய தோயோடா வெல்பயர்ஸ் காரை அங்கிருந்து அகற்றும்படி கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடங்கியதாக சியோங் கூறினார்.

ஆனால், அந்த மனிதர் காரை அகற்ற மறுத்து விட்டார்.

“அவர் கோபமடைந்து அங்கிருந்த மேசையை குத்தியதோடு எங்களையும் பயமுறுத்தினார். எனது நண்பர்கள், லீ மற்றும் லியோங், சூழ்நிலையை அமைதிப்படுத்த முயன்றனர். ஆனால், அந்த மனிதர் எங்களைத் தொடர்ந்து குத்தியதோடு உதைத்தார்”, என்று சியோங் ஊடகச் செய்தியாளர்களிடம் கூறினார். அவர்களுடன் மசீச பொதுமக்கள் புகார்கள் சேவை குழுவின் தலைவர் மைக்கல் சோங்ஙும் இருந்தார்.

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. அத்துடன் அம்பாங் போலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றும் செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

அம்பாங் ஜெயா துணை போலிஸ் தலைவர் முகமட் ஸைட் ஹசான் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார். இது பீனல் சட்டம் செக்சன் 323 இன் விசாரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.