மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்.டி.யு.சி), தனியார் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 90 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் எனும் புத்ராஜெயாவின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என முதலாளிகளை வலியுறுத்துயுள்ளது.
தனியார் துறை தொழிலாளர்களின் நலனில், முதலாளிகள் அக்கறையின்றி இருக்கக்கூடாது என்று அதன் தலைமைச் செயலாளர் சோலமன் கூறினார்.
“அவர்களும் உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பு செய்கிறார்கள் (மொத்த உள்நாட்டு உற்பத்தி),” என்று அவர் கூறினார்.
“குழந்தை பெற்றெடுத்த ஒரு தாய்க்கு 90 நாட்களுக்கு விடுப்பு கொடுக்க மறுப்பதில் முதலாளிக்கு எந்தவொரு காரணம் இல்லை என்று எம்.டி.யு.சி நம்புகிறது,” என்று அவர் ஃப்.எம்.தி.-யிடம் கூறினார்.
சில நிறுவனங்கள் ஏற்கெனவே ஆறு மாதங்களிலிருந்து ஒரு வருடத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்கியுள்ளன, அவற்றுள் சில முழுமையான ஊதியமும் சில பகுதி ஊதியம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
90 நாள் விடுப்பு கட்டாயமாக இருந்தால், தனியார் நிறுவனங்கள் சுமார் 20 பில்லியன் ரிங்கிட் செலவழிக்க வேண்டிவரும், எனும் மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் (எம்.இ.ஃப்.) ஓர் அறிக்கைக்குப் பதிலளிக்கையில் சோலமன் இவ்வாறு கூறினார்.
“மகப்பேறு விடுப்பில் இருக்கும் பணியாளர்களுக்கு 10 பில்லியன் ரிங்கிட்டும், அவர்களுக்குப் பதிலாக நியமிக்கப்படும் தற்காலிக பணியாளர்களுக்கு 10 பில்லியன் ரிங்கிட்டும் நிறுவனங்கள் செலவழிக்க வேண்டிவரும் என நாங்கள் மதிப்பிட்டுள்ளோம்” என்று எம்.இ.ஃப்.-ன் நிர்வாக இயக்குனர் சம்சுடின் பர்தான் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் 250,000 பெண் தொழிலாளர்கள் சராசரியாக மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆண்டிற்கு 34 பில்லியன் ரிங்கிட்டை மலேசியாவிலிருந்து வெளியே கொண்டுசெல்லும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க எம்.இ.ஃப். முயற்சிக்க வேண்டும் என்று சோலமன் கூறினார்.
“இந்த 34 பில்லியன் ரிங்கிட் முறையான ஆவணங்கள் கொண்டுள்ள தொழிலாளர்களின் கணக்குபடி, ஆவணங்கள் இல்லாதவர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை, 2018 வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தபோது, அரசு ஊழியர்களைப் போல, தனியார் துறைத் தொழிலாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பு 60 நாட்களில் இருந்து 90 நாட்களுக்கு அதிகரிக்கப்பட வேண்டுமென பிரதமர் நஜிப் ரசாக் பரிந்துரைத்தார்.