பட்ஜெட் 2018 : பிடிபிடிஎன் பிரச்சனைகளைத் தீர்க்க முடியவில்லை, சமூக ஆர்வலர் கூறுகிறார்

மாணவர் ஆர்வலர் ஆடம் ஆட்லி, கடனில் தள்ளுபடி செய்தல் மற்றும் திருப்பி செலுத்தும் காலத்தை நீட்டித்தல் போன்ற அரசாங்கத்தின் ஆலோசனைகள், தேசிய உயர்க்கல்விக் கடனுதவி திட்டத்தின் (பிடிபிடிஎன்) சுமையைக் குறைக்காது, அது ஒரு சரியான நடைமுறையல்ல எனக் கூறியுள்ளார்.

ஒரே தடவையில், தங்கள் கடன்களைக் கட்டி முடிக்கக் கூடியவர்களுக்கு மட்டுமே தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது, எனவே, தற்போதய பொருளாதாரச் சூழலில் இந்த இரண்டு நடவடிக்கைகளும் அர்த்தமற்றது என்று ஃப்.எம்.தி-யிடம் அவர் தெரிவித்தார்.

2018 வரவு செலவு திட்டத்தில், பிடிபிடிஎன் கடனை முழுமையாகக் கட்டிமுடிப்பவர்களுக்கு  20% தள்ளுபடி வழங்கப்போவதாக பிரதமர் அறிவித்தார்.

50% கடனைச் செலுத்துபவர்கள், சம்பளக் கழிப்பின் வழி கடனைச் செலுத்த தேர்வு செய்பவர்களுக்கு 10% தள்ளுபடி என்றும் நஜிப் அறிவித்தார்.

கடனைத் திருப்பி செலுத்துவதற்கான காலக் கெடுவையும் 6 மாதத்திலிருந்து 12 மாதங்களாக நீட்டித்தார்.

ஆடமின் கருத்துப்படி, தற்போதைய பொருளாதார நிலைமை பெரும்பாலான பட்டதாரிகளுக்குத் தங்கள் கடன்களைத் திருப்பி செலுத்த அல்லது வேலையில் அமர்ந்து, ஒரு வருடம் கழித்து, கடனைத் திருப்பி செலுத்த தொடங்கும்போது, அவர்களிடம் போதுமான பணம் இருக்க வேண்டும்.

மாணவர்களின் கடனை அடைப்பதற்கு அரசாங்கம் இன்னும் விரிவான தீர்வை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை மாணவரான ஆடம், பிடிபிடிஎன் அரசாங்கத்திற்கு ஒரு சுமையாக இருக்கிறது, அது அகற்றப்பட வேண்டும் என்று மேலும் கூறினார்.

எனவே, அரசாங்கம், மக்களுக்கு இலவசக் கல்வியை வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்று அவர் கூறினார்.

இலவசக் கல்வி அரசாங்க செலவினங்களை அதிகரிக்கும் எனும் சிலரின் ஆட்சேபனைகளை ஆடம் மறுத்தார்.

மாறாக, இலவசக் கல்வி வழங்க போதுமான நிதி அரசாங்கத்திடம் இருப்பதாக அவர் கூறினார்.

“பணத்தை நாம் எப்படி ஒதுக்கீடு செய்கிறோம் என்பதுதான் இங்கு விசயம்” என்று அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.

“என் பார்வையில், நாம் தேவையில்லாத விஷயங்களில் அதிக பணம் செலவழிக்கிறோம், உதாரணத்திற்கு, பிரதமர் அலுவலகத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது போல.”

கடன்களில் தள்ளுபடி அல்லது கால நீட்டிப்புகள் வழங்கினாலும்  கூட, புதிய பட்டதாரிகள்  தங்கள் பிடிபிடிஎன்  கடனைத் திருப்பி செலுத்தக் கடினமாக உள்ளது என்று தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இன்னொரு மாணவர் ஆர்வலர் அஷீகா அலி சேய்தி அலிவி தெரிவித்தார்.

“வாழ்க்கைச் செலவினங்களின் அதிகரிப்பு, குறிப்பாக கோலாலம்பூரில், RM2,500 மாத சம்பளம் பெறும் பட்டதாரிகளுக்கு, பிடிபிடிஎன்  கடன்களைத் திருப்பிச் செலுத்துவது சாத்தியமற்றது,” என்று அவர் கூறினார்.

“கடன் கொடுப்பதைவிட, கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி வாய்ப்புகளை அரசாங்கம் வழங்க வேண்டும். மலேசியாவில் கல்வி வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் பலர் வெளிநாடுகளுக்குப் படை எடுக்கின்றனர், இதன் விளைவாக நம் நாட்டில் பலதுறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் குறைவாகவே உள்ளனர்.”

கட்டணம் வசூலிப்பதில் கழிவு மற்றும் கால நீட்டிப்பு, அரசாங்கத்திற்குக் கணிசமாக உதவும் என்பது சந்தேகத்திற்கு உரியது என அரசியல் ஆய்வாளர் கூ கேய் பெங் கூறுகிறார்.

“குறிப்பாக, மாணவர்கள் மத்தியில் வேலையில்லா நிலை இன்னும் அதிகமாக உள்ள இந்த சூழலில் இது நிச்சயம் சாத்தியப்படாது,” என்றும் அவர் கூறினார்.