மகாதீரின் மன்னிப்பு, 14-வது பொதுத் தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது

30 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஓப்பராசி லாலாங் சம்பவத்திற்கு, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் மன்னிப்பு கேட்க வேண்டுமென அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று, அண்மையில்  கோரிக்கை விடுத்தது.

ஆனால், மகாதீர் மன்னிப்பு கேட்டாலும் கேட்காவிட்டாலும், வாக்காளர்களின் ஆதரவை அது பாதிக்காது என்று அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

அரசியல் ஆய்வாளர் கூ கேய் பெங், அந்த முடிவை எடுத்தது போலிஸ்காரர்கள் என பலமுறை மகாதீர் கூறிவிட்டதால், அவர் மன்னிப்பு கேட்க மாட்டார் என்று தான் நம்புவதாகக் கூறினார்.

மகாதிர் மன்னிப்பு கேட்பது நல்லதுதான், என்றாலும், பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, மகாதிர் நடத்திய மனித உரிமை மீறல் பதிவுகள் உதவாது என்று கூ தெரிவித்தார்.

“(மகாதிர் மன்னிப்பு கேட்டாலும் கேட்காவிட்டாலும்) அது எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.”

“(தேர்தல்) மகாதிரைப் பற்றியது அல்ல, தங்களால் சிறந்ததைக் கொடுக்க முடியுமென, மலாய் மற்றும் கிழக்கு மலேசிய வாக்காளர்களைப் பக்காத்தான் ஹராப்பான் நம்பவைக்க வேண்டும், அதுதான் முக்கியம்,” என்று கூ மலேசியாகினியிடம் கூறினார்.

1987-ஆம் ஆண்டில், ஒப்பராசி லாலாங்கில், உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் (இசா) கீழ் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது, பிரதமராகவும் உள்துறை அமைச்சருமாக இருந்த மகாதிர், ஓப்ஸ் லாலாங் நடவடிக்கை போலிசாரால் நடத்தப்பட்டது, அதனைத் தடுக்க தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று மகாதிர் பலமுறை கூறிவிட்டார்.

ஹராப்பான் தலைவரான மகாதிர், ஓப்ஸ் லாலாங் நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்ட டிஏபி-யின் லிம் கிட் சியாங் மற்றும் அமானாவின் மொஹமட் சாபு உள்ளிட்ட சிலருடன் தற்போது இப்போது இணைந்துள்ளார்.

இதற்கிடையே, இசா சட்டத்தின் முன்னாள் கைதிகள், தங்களின் கோபத்தை வெளிபடுத்துவது நியாயமானது, காரணம் அவர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்டனர், என்று ஜனநாயக மற்றும் பொருளாதார விவகார நிறுவனத்தின் (ஐடியாஸ்) தலைமை நிர்வாகி வான் சைபுல் வான் ஜான் கூறினார்.

இருப்பினும், இந்தச் சம்பவத்திற்குக் காரணம் தனிபட்ட ஒருவரின் செயல் அல்ல என்பதனை அவர் நினைவுறுத்தினார்.

அமைச்சரவை உறுப்பினர்களும் அந்நடவடிக்கைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று வான் சைபுல் மேலும் தெரிவித்தார்.

“அவர்கள் (அமைச்சரவை) இராஜினாமா செய்யவில்லை என்றால், அவர்களும் மகாதிரின் செயல்களுக்கு ஆதரவாக இருந்ததாகதான் அர்த்தம், ஆக, யாரும் இந்த இருண்ட வரலாற்றில் இருந்து தப்பிக்க முடியாது,” என்றார் அவர்.

மகாதிரை மன்னிப்பு கேட்க கோரும் நபர்கள், அந்நேரத்தில் மகாதிரின் செயலுக்கு ஆதரவாக இருந்த, அன்வார் இப்ராஹிம் மற்றும் ஏனைய அமைச்சரவை உறுப்பினர்களிடமும் மன்னிப்பு கேட்க கோர வேண்டும்,” என்று அவர் கூறினார்.