60 ஆண்டுகளாக உதாசீனப்படுத்தப்பட்டுள்ள ஏழை இந்தியர்களுக்கு (பி40 என்று வகைப்படுத்தப்பட்டவர்கள்) நிதியும் திறன் பயிற்சியும் அளிக்க சிலாங்கூர் மாநில அரசு இந்திய அரசுசார்பற்ற அமைப்புகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறது.
பல ஆண்டுகளாக இந்தியர்கள் ஓரங்கட்டப்பட்டது வருந்தத்தக்கது என்று சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி கூறினார்.
இந்தியர்கள் தொழில்கள் தொடங்கவும் அவர்களுடைய வருமானத்தின் அளவை உயர்த்தவும் மாநில அரசு சிலாங்கூர் இந்தியர் தொழில் முனைவோர்கள் செயல்திட்டத்தின் கீழ் மானியம் மற்றும் வட்டியில்லாக் கடன்கள் வழங்கும் என்று அஸ்மின் கூறினார்.
இது ஒரு பொதுமக்கள் சார்ந்த பங்காளித்துவம் ஆகும். அதில் சிலாங்கூர் மாநில அரசு அடிமட்ட இந்தியர்களின் விவகாரங்களை நன்கு அறிந்துள்ள அரசுசார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து இந்தியர்களின் ஆற்றலை வளர்த்து சிறு தொழில்களைத் தொடங்க அவர்களுக்கு உதவுவதாகும் என்றாரவர்.
சிலாங்கூர் அரசு இதுவரையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்களைத் தொடங்குவதற்கு அனைத்து இன மக்களுக்கும் ரிம300 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது.
நேற்றிரவு ஷா அலாமில், மாநிலத்தின் தொழில் முனைவோர்கள் செயல்திட்டத்தை தொடக்கி வைத்த நிகழ்ச்சியில் பேசிய அஸ்மின், பி40 என்று வகைப்படுத்தப்பட்டுள்ள மாதம் ரிம3,000-த்திற்கும் குறைவான வருமானம் பெறும் இந்தியர்களுக்கு உதவ அதிகமான ஒதுக்கீடு செய்யும் என்றார்.
சிலாங்கூர் இந்தியர் தொழில் முனைவோர்கள் செயல்திட்டத்தைத் தொடக்கி வைப்பதற்கு முன் பேசிய அஸ்மின், இந்தியர்கள் நீண்டகாலமாக ஓரங்கட்டப்பட்டுள்ளனர். பி40 வகைச் சேர்ந்தவர்கள் மேம்பாடடைய நாம் கவனம் செலுத்துவோம் என்றார்.
பின்னர், அத்திட்டத்தைத் தொடங்குவதற்கு, மொத்தம் ரிம600,000 க்கான காசோலைகளை பி40 இல் உள்ளவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 15 இந்திய அரசுசார்பற்ற அமைப்புகளிடம் அஸ்மின் வழங்கினார்.
பி40 இந்தியர்களுக்கு உதவ வேண்டியது குறித்து அஸ்மினுடன் டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ எடுத்துக்கொண்ட நடவடிக்களைத் தொடர்ந்து அதற்கான திட்டத்தை வரையும் பணியை அஸ்மின், சந்தியாகோவிடம் அளித்துள்ளார்.
இதர மாநில அரசுகளுக்கும் ‘மற்றவர்களுக்கும்’ முன்னுதாரணமாகத் திகழும் சிலாங்கூர் மாநில அரசுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.
15 இந்திய அரசுசார்பற்ற அமைப்புகளிடம் வழங்கப்பட்ட ரி.ம. 600,000 பிற்படுத்தப்பட்ட பி40 இல் உள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதை மாநில முதல்வர் கண்காணிக்க வேண்டும். முடிந்தால் இந்த உதவித்தொகை பெற்றோரின் பெயர் பட்டியலை மாநில அரசின் மாதச் செய்திப் பத்திரிகையில் (சிலான்கூர் கினி) பிரசுரிப்பதோடு மாநில அரசின் அகப்பக்கத்திலும் பதிவு செய்ய வேண்டும்.