பெர்சே 2.0 : 14-வது பொதுத் தேர்தலைக் கண்காணிக்க 3000 தொண்டர்கள் தேவை

14-வது பொதுத் தேர்தலில், வழக்கத்திற்கு மாறான மற்றும் மோசடி நடைமுறைகளைப், பொது மக்கள் புகார் செய்வதற்கு இலகுவாக, தேர்தல் கண்காணிப்பு குழு – பெர்சே 2.0, இன்று ‘கண்காணிப்பாளர்’ (பெமந்தாவ்) எனும் பிரச்சார இயக்கத்தைத் தொடங்கியது.

கடந்த 2013-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட அக்கூட்டணியில், பெர்சே 2.0, மலேசிய மக்கள் குரல் (சுவாராம்) மற்றும் சமூகத் தொடர்பு மையம் (கோமாஸ்) ஆகிய அரசு சாரா இயக்கங்கள் இருக்கின்றன.

பெர்சே 2.0-ன் தலைவரான மரியா சின் அப்துல்லா, ஆர்வமுள்ள பொது மக்களை நேர்மையான தேர்தலுக்காகப் போராட உதவுமாறு வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள 29 மண்டலங்களுக்கு, 3,000 தொண்டர்கள் மற்றும் 100 ஒருங்கிணைப்பாளர்கள் தேவையென, பெர்சே 2.0 இலக்கு கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆர்வமுள்ளவர்கள் இந்த இணையத்தள முகவரிக்குச் சென்று தங்களைப் பதிந்துகொள்ளலாம் :- www.pemantau.org/daftar.

“14-வது பொதுத் தேர்தல் மிக முக்கியமான ஒன்று, ஆக, அது நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய எங்களுக்குப் பொது மக்களின் உதவி தேவை,” என்று அவர் மேலும் கூறினார்.

“இம்முறை தேர்தலில் பெரும் ஊழல்கள் நடக்கலாம் என நாங்கள் நினைக்கிறோம்,” என்று , இன்று கோலாலம்பூர்-சிலாங்கூர் சீன மாநாட்டு மண்டபத்தில், அந்தப் பிரச்சார இயக்கத்தைத் தொடக்கி வைத்து அவர் பேசினார்.

ஒவ்வொரு மலேசியருக்கும், வாக்களிக்கும் உரிமை மட்டுமல்ல, தூய்மையான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடப்பதை உறுதி செய்வதிலும் பொறுப்பு உண்டு என்றார் அவர்.

தேர்தல் ஆணையம் மற்றும் அரசாங்கம், நேர்மையான மாற்றங்களைச் செய்ய தயக்கம் காட்டுவதால், நிலைமை மோசமடைந்து, தேர்தலில் இன்னும் மோசடிகளும் ஊழலும் நடப்பதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் அரசியல் வன்முறைகள் பற்றிய புகார்களைக் கண்காணிப்பதில் சுவாராம் கவனம் செலுத்தும் என அதன் நிர்வாக இயக்குநர், சிவன் துரைசாமி தெரிவித்தார்.

பிரச்சாரக் காலத்தின்போது அடிக்கடி அச்சுறுத்தல் மற்றும் வன்முறைகள் நடக்கின்றன, கடந்த 13-வது பொதுத் தேர்தலில், அரசியல் வன்முறை வழக்குகள் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டதாக சிவன் தெரிவித்தார்.

“பிரச்சாரம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்பதால், எந்த வேட்பாளருக்கும் வன்முறை நடக்கக்கூடாது.”

இதற்கிடையில், கோமாஸ் இனப் பிரச்சினைகள் தொடர்பான புகார்களைக் கண்காணிக்கும் எனவும் கூறப்பட்டது.