ஹை ரோஸ், எங்களிடம் மாற்றுத் திட்டம் “பி” இருக்கிறது, மகாதிர் கூறுகிறார்

 

எதிர்க்கட்சிகளின் கூட்டணியை பதிவு செய்வதில்லை என்று மன்றங்கள் பதிவாளர் முடிவு செய்தால், அம்முடிவுக்கு எதிரானத் திட்டம் “பி” பக்கத்தான் ஹரப்பானிடம் இருக்கிறது.

அத்திட்டம் இவ்வாரம் வெளியிடப்படும் என்று ஹரப்பான் தலைவர் மகாதிர் கூறினார்.

எங்களிடம் பல தொடர் செயல் நடவடிக்கைகள் இருக்கின்றன. அவை இவ்வாரம் அறிவிக்கப்படும். ஆனால், இப்போதைக்கு திட்டம் பியை வெளியிட முடியாது என்று மகாதிர் இன்று மதியம் நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஹரப்பான் பதிவை அரசாங்கம் வேண்டுமென்றே தள்ளிப்போடுகிறது. அடுத்தப் பொதுத் தேர்தலில் பிஎன் தோற்றுவிடும் என்ற பயத்தில் அது இவ்வாறு செய்கிறது என்றாரவர்.

ஹரப்பான் பதிவு செய்யப்படுவதற்கான மனு ஜூலை 24 இல் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் பதில் ஏதும் இல்லை.

ரோஸ் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஹரப்பான் அதன் சின்னத்தை தாக்கல் செய்தது.

இந்தத் தாமதத்திற்கான காரணத்தைத் தெரிவிக்கும்படி பயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் டிசே டிசின் உள்துறை அமைச்சரைக் கேட்டிருந்தார்.

அதற்குப் பதில் அளித்த அமைச்சு, பாதுகாப்பு மற்றும் பொதுநலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மனுக்களை மிக துல்லியமாக ஆராய வேண்டியிருக்கிறது என்று கூறியுள்ளது.

ஹரப்பானின் சட்டப் பிரிவுத் தலைவர் கோபிந்த் சிங் டியோ, ரோஸை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது பற்றி கூட்டணி ஆலோசித்து வருவதாக நேற்று கூறினார்.