போலீஸ் செய்து கொண்டிருக்கும் 1எம்டிபி மீதான விசாரணையில் இன்னும் போதுமான சாட்சியங்கள் இல்லாதிருப்பது தெரிய வந்துள்ளதாக சட்டத்துறைத் தலைவர் (எஜி) அபாண்டி அலி இன்று கூறினார்.
1எம்டிபி மீதான வழக்கு மூடப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது, அது சரியானதல்ல என்றாரவர்.
விசாரணை அறிக்கைகள் தொடர்ந்து சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்படுகிறது. அவற்றை நாங்கள் பார்க்கிறோம். அவற்றில் குறைபாடுகள் இருந்தால், அவற்றின் மீது மேலும் விசாரணை செய்யுமாறு நாங்கள் உத்தரவிடுகிறோம் என்று அபாண்டி இன்று புத்ரா ஜெயாவில் கூறினார்.
இவ்வழக்கின் எந்தப் பகுதிக்கு மேற்கொண்டு விசாரணை தேவைப்படுகிறது என்பதைக் கூற அபாண்டி மறுத்து விட்டார்.
எது விசாரிக்கப்படுகிறது என்பது பற்றிய விபரத்தை நான் கூற முடியாது. போதுமான சாட்சியங்கள் இல்லை என்று நாங்கள் கூறுகிறோம். சாட்சியங்கள் இன்னும் போதுமானதாக இல்லாதப் பகுதியில் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம் என்றாரவர்.
அக்டோபர் 24 இல், 1எம்டிபி விவகாரத்தை மீண்டும் விசாரிக்கும்படி அபாண்டி போலீஸுக்கு உத்தரவிட்டிருப்பதாக நேற்று பிரதமர்துறை அமைச்சர் அஸலீனா ஓத்மான் சைட் தெரிவித்திருந்தது பற்றி கருத்துரைக்கும்படி கேட்டதற்கு, அபாண்டி இவ்வாறு பதில் கூறினார்