மகாதிர் முகமட் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு ஒரு தெய்வீகச் செய்தி வைத்திருக்கிறார் – வருந்துவீர்!
மாராங் நாடாளுமன்ற உறுப்பினரான ஹாடி ஒரு பிரம்மாண்டமான பாவம் செய்திருக்கிறார் என்று அவரை குற்றம் சாட்டிய மகாதிர், ஹாடி அவரது “அமனாட் ஹாடி-யை (ஹாடியின் உரை) திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முன்னாள் பிரதமர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று ஹாடி விடுத்திருந்த கோரிக்கைக்கு எதிர்வினையாற்றிய மகாதிர், பாஸ் கட்சியின் தலைவர்தான் அவரது செயல்களுக்காக பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்றார்.
கெடா, மெமாலி சம்பவம் மற்றும் அச்சம்பவத்தில் புனிதப் போர் நடத்துவதாக நம்பிய இப்ராகிம் முகமட்@ இப்ராகிம் லிபியா என்பவரின் ஆதரவாளர்களால் நான்கு போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டதற்கு அமனாட் ஹாடி மீது மகாதிர் மீண்டும் குற்றம் சுமத்தினார்.
இஸ்லாமியக் கட்சியில் சேராதவர்களை நாத்திகர்கள் என்று அறிவிப்பதற்கான உரிமையை ஹாடிக்கும் பாஸ் கட்சிக்கும் யார் கொடுத்தது என்று மகாதிர் வினவினார்.
பாஸ் கட்சியில் சேர்ந்தால்தான் ஒருவர் முஸ்லிம் ஆவார் என்று எந்த இடத்தில் குரான் அல்லது ஹாடித்தில் கூறப்பட்டிருக்கிறது? உலகிலுள்ள 1.7 பில்லியன் முஸ்லிம்கள் பாஸ் கட்சியில் சேராததால் அவர்கள் முஸ்லிம்கள் இல்லையா?, என்று மகாதிர் கேட்டார்.
மலேசியாவிலுள்ள முஸ்லிம்களுக்கிடையில் பாஸ் பெரும் பிளவை ஏற்படுத்தி விட்டது. அதன் விளைவாக குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களுக்கு எதிராகவும் கணவன்மார்கள் அவர்களுடைய மனைவிமார்களுக்கு எதிராகவும் திரும்பிவிட்டனர்.
இன்னும் பலவற்றை சுட்டிக் காட்டிய மகாதிர், இதெல்லாம் ஹாடியின் அமனாட்டினால் வந்த வினை. இது ஒரு மிகப் பெரிய அளவிலான பாவம். இதற்காக மட்டுமே, வருத்தம் தெரிவிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றார் மகாதிர்.
மலேசியாவில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் ஹாடி பெரும் தீங்கிழைத்து விட்டார். அவரால் உண்டான பிளவு முஸ்லிம்களை பலவீனப்படுத்தி விட்டது.
பாஸ் தலைவர் ஹாடி பிரதர் நஜிப் ரசாக் புரியும் தவறான செயல்களை தற்காக்கிறார் என்றும் பொதுத் தேர்தலில் அம்னோ வெற்றி பெறுவதற்கு அவர் உழைக்கிறார் என்றும் மகாதிர் அவர் மீது குற்றம் சாட்டினார்.
பொதுத் தேர்தலில் பாஸ் ஒன்றும் பெரிதாக சாதிக்கப் போவதில்லை என்று கூறிய மகாதிர், பாஸ் தொடர்ந்து இஸ்லாத்தை அதற்கு பயனுடையதாக்கிக்கொள்ளும் என்று மேலும் கூறினார்.