சுப்ரா : இந்தியத் தொழில் முனைவர் ஒப்பந்தக் குழுவை அரசாங்கம் அமைக்க வேண்டும்

இந்தியத் தொழில் முனைவர்களின் அரசாங்க கொள்முதல் மற்றும் குத்தகைகளை  மேற்பார்வையிட, நிதி அமைச்சில் ஒரு சிறப்பு குழுவை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஆய்வு செய்யுமாறு அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இக்குழுமத்தின் உருவாக்கம், இந்திய சமூகம் அரசு மற்றும் அரசாங்கத்துடன் இணைந்த நிறுவனங்கள் (ஜிஎல்சி) திட்டங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க உதவும் என்று ம.இ.கா. தேசியத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

இன்று, பிரதமர் நஜிப் கையெழுத்திட்ட, குடியுரிமை ஒப்புதல் கடிதங்களை 177 இந்தியர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சுதந்திரத்திற்கு முன் பிறந்தவர்கள், பிறப்பைப் பதிவு செய்யாதவர்கள் மற்றும் முறையான அடையாள ஆவணம் இல்லாதவர்கள் போன்றோர் இன்று அந்த ஒப்புதல் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

பல இந்தியச் சிறுதொழில் முனைவர்களுக்கு, குறிப்பாக, பல்கலைக்கழகப் படிப்பை அண்மையில் முடித்த இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை தேவைபடுவதாக அவர் கூறினார்.

“இவர்களுக்குச் சில உதவிகள் தேவைபடுகின்றன, அதனால்தான் நாங்கள் இந்த முன்மொழிவை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம். அரசாங்கம் அதனைக் கருத்தில் கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.