நஜிப்: 300,000 இந்தியர்களுக்குக் குடியுரிமை இல்லை என்பது கட்டுக் கதை

நாட்டில் 300,000 இந்தியர்கள் குடியுரிமை இல்லாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர், எனும் எதிர்கட்சியினரின் பிரச்சாரம் தவறானது என்று அரசாங்கம் மேற்கொண்ட ‘மெகா மை டஃப்தார்’ நிரூபித்துள்ளது.

அந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை, சுதந்திரத்திற்கு முன் பிறந்தவர்கள் மற்றும் பிறப்பைப் பதிவு செய்யாதவர்கள் என சுமார் 2,500 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே, அப்பிரச்சாரத்தின் போது பதிவு செய்யப்பட்டுள்ளன என பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்தார்.

“இது ஒரு கட்டுக்கதையாகும், இதில் நாங்கள் 2,500 விண்ணப்பங்களை மட்டுமே பெற்றுள்ளோம்…., கடந்த தேர்தலில் 40,000 வங்காளாதேசிகளை ஓட்டுபோட கொண்டு வந்தோம் என்ற கதையைப் போல, இன்னும் பல கதைகள் கூறப்படுகின்றன,” என்று இன்று நடைபெற்ற, இந்தியர்களுக்குக் குடியுரிமை ஒப்புதல் கடிதம் வழங்கும் நிகழ்ச்சியில் நஜிப் பேசினார்.

அவரது தலைமைத்துவத்தின் கீழ் உள்ள அரசாங்கம்,  இந்தியர்கள் குடியுரிமை விவகாரத்தைக் கவனிக்க ஒரு சிறப்புப் பணிப் படையை (SITF) இந்தியச் சமூகப் பொருளாதார மேம்பாட்டு பிரிவின் (செடிக்) கீழ் அமைத்து, 2011-ம் ஆண்டு முதல் ‘மை டஃப்தார்’ மூலம் பணியாற்றி வருவதன் வழி, தனது கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளதாக நஜிப் கூறினார்.

“நமது நாட்டில் இந்திய சமூகம் 7.4 விழுக்காடுதான் என்றாலும், இந்தச் சிறுபான்மை குழுவை  அரசாங்கம் புறக்கணிக்கப்பதில்லை,” என நஜிப் கூறினார். சில தலைவர்கள் 22 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோதிலும், இந்தியச் சமுதாயத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கவில்லை என்று கூறினார்.

அதே நேரத்தில், இந்தியச் சமூகத்தைப் பிரதிநிதிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும், பிற இனங்களுக்கு ஈடாக, சிறுபான்மையினரை மேம்படுத்துவதில் முனைப்பு காட்ட வேண்டுமெனவும் நஜிப் கேட்டுக்கொண்டார்.

“அதனால்தான், 2018 பட்ஜெட்டில், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உயர்க்கல்வி கூடங்களில் 7% இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால், இதில் மிக முக்கியமானது அவர்களுக்குக் குடியுரிமை இருக்க வேண்டும்,” என்றார் அவர்.

“ஆனால் பலர் அதை எளிதாக எடுத்துக் கொள்கின்றனர், குடியுரிமை இருந்தால், பிரிம், தெக்கூன் கடனுதவி, 1 மலேசியா கிளினிக்கில் சிகிச்சை போன்ற பலவகையான உதவிகளைப் பெற முடியும் … எங்களுக்கு எதுவும் தேவையில்லை, ஆனால், நேரம் வரும்போது, தயவுசெய்து உதவுங்கள்….அது மட்டும்தான்” என்று அவர் அந்நிகழ்ச்சியில் பேசினார்.

இன்றைய நிகழ்ச்சியில், பிரதமரோடு, துணைப் பிரதமர், ம.இ.கா. தேசியத் தலைவர் மற்றும் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் ‘மை பிபிபி’ , ஐபிஃப் , மக்கள் சக்தி போன்ற கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.