ஷைட் இப்ராஹிம் : மகாதீரை இனி மக்கள் கவனித்துக் கொள்வர்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீரின் மெய்க்காப்பாளரை விலக்கிக் கொண்ட காவல்துறையையும் அரசாங்கத்தையும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் குறை கூறினர்.

டிஏபி-யைச் சேர்ந்த ஷைட் இப்ராஹிம், போலீஸ் மற்றும் பிரதமர் நஜிப் டாக்டர் மகாதிருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றார்.

“இந்நடவடிக்கை எரிச்சலூட்டுகிறது, நடக்கக்கூடாத ஒன்று … ஆனால், பரவாயில்லை, மக்கள் அவரை கவனித்துக்கொள்வார்கள்,” என்று ஃப்.எம்.தி.-யிடம் அவர் கூறினார்.

இதற்கிடையே, ஜனநாயக நாடுகளில், முன்னாள் தலைவர், பிரதமர் அல்லது ஜனாதிபதிக்கு, அலுவலகம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் போன்ற சலுகைகளை வழங்குகின்றனர் என ஹராப்பான் தலைமைச் செயலாளர் சைஃபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

டாக்டர் மகாதிரின் சமையல்காரர் மற்றும் அலுவலக உதவியாளரின் ஒப்பந்தத்தை, புத்ராஜெயா முடித்துகொண்ட ஒரு வருடத்தில் இது நடந்துள்ளது.

1981 முதல் 2003 வரை நாட்டின் தலைவராக இருந்த டாக்டர் மகாதிர் நீண்ட காலமாக பிரதமர் பதவி வகித்த பிரதமர் ஆவார். கடந்த ஆண்டு, அம்னோ உறுப்பியத்தை இழந்த மகாதீர், இப்போது எதிர்க்கட்சி கூட்டணிக்குத் தலைமை தாங்குகிறார்.

டிஏபி நாடாளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் சந்தியாகோ, அப்துல்லா அஹ்மட் படாவிக்கு வழங்கப்படும் சேவைகள் மகாதீருக்கும் வழங்கப்பட வேண்டுமெனக் கூறினார்.

பிகேஆர் துணைத் தலைவர் தியான் சுவா, நாட்டிற்கு சேவையாற்றிய, நாட்டின் வளப்பத்திற்கு பங்களித்த டாக்டர் மகாதிருக்கு ஒரு மெய்க்காப்பாளர் வழங்கப்பட வேண்டும் என்றார்.

“இன்றைய அரசாங்கம், நாட்டின் பங்கு மற்றும் அரசியல் நலன் இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் இருப்பதையே இது காட்டுகிறது,” என்றார் அவர்.

“சேவை அரசியல் மயமாக்கப்படக் கூடாது, மகாதீரின் நிலைப்பாடு காரணமாக வெறுமனே அதனைத் திரும்பப் பெற கூடாது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.