வேல்ஸ் இளவரசர் சார்லஸ், தமது துணைவியார் இளவரசி கெமிலாவுடன், மலேசியாவுக்கு 7 நாள்கள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ளார். மலேசியா – இங்கிலாந்து இருதரப்பு உறவின் 60-ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி அவரின் வருகை அமைந்துள்ளது.
அரச தம்பதிகளை ஏற்றிவந்த இராணுவ விமானம், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் மாலை 6.45 மணிக்கு தரையிறங்கியது. அவர்களைப் பிரதமர் துறை இலாகாவின் துணை அமைச்சர் எஸ்.கே.தேவமணி வரவேற்றார்.
அவரோடு, துணை வெளியுறவு அமைச்சர் ரீசல் மெரிகான் நைனா மெரிக்கன் மற்றும் மலேசியாவுக்கான பிரிட்டிஷ் உயர் ஆணையர் விக்கி ட்ரெடெல் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இளவரசர் சார்லஸ்-கெமிலா தம்பதியர், கோலாலம்பூர், பேராக், சரவாக் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களைப் பார்வையிட திட்டமிட்டுள்ளனர். அதோடுமட்டுமின்றி, நவம்பர் 2 முதல் நவம்பர் 8 வரை இன்னும் பல பிரதான நிகழ்வுகளிலும் அவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி கமிலா, அரச குடும்பத்தினர், ஊனமுற்ற குழந்தைகள், வணிக சமூகத்தினர் என, பல்வேறு நிலைகளைச் சார்ந்த மலேசிய மக்களைச் சந்திக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது,
இஸ்தானா நெகாராவில் , மாட்சிமை தங்கியப் பேரரசர், சுல்தான் முஹம்மத் V-யும் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
மலேசியாவுக்கான, அரச தம்பதியினரின் முதல் வருகை இதுவாகும்.
1998-ஆம் ஆண்டு, கோலாலம்பூரில் நடந்த 16-வது காமன்வெல்த் போட்டியின் துவக்க விழாவில் பங்கேற்க பிரிட்டிஷ் அரசியார் எலிசபெத் II, அவர்தம் கணவர் பிலிப்ஸ்சுடன் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து, இளவரசர் வில்லியம், அவர்தம் மனைவி கேட் மிடில்டனும் செப்டம்பர் 2012-ல் மலேசியாவிற்கு வருகை புரிந்திருந்தனர்.
மலேசியாவிற்கும் ஐக்கிய இராஜ்யத்திற்கும் இடையிலான இருவழி தொடர்புகள் வணிகம், தற்காப்பு மற்றும் பாதுகாப்பு, முதலீடு, கல்வி, டிஜிட்டல் பொருளாதாரம், பச்சை தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சுற்றுலா என பரவலான பல பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
ஆசியாவில், இங்கிலாந்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தை மலேசியாவாகும், ஐரோப்பாவில் மலேசியாவின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக இங்கிலாந்து உள்ளது. கல்வி துறையில், தற்போது இங்கிலாந்தில் 18,000- க்கும் அதிகமான மலேசியர்கள் படிக்கின்றனர்.
அக்டோபர் 30 முதல் நவம்பர் 9 வரை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியாவிற்கு இளவரசர் தம்பதியர் வருகை மேற்கொள்ளவுள்ளனர். அக்டோபர் 30, சிங்கப்பூருக்கு வருகை புரிந்த பிரின்ஸ் சார்லஸ் மற்றும் கேமிலா, மலேசியாவைப் பார்வையிட்ட பின்னர், இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.