ஜோமோ : இந்தியர்களைக் கவர, பிரதிநிதிகளின் வழி பணப் பட்டுவாடா

இந்தியர்களின் மனதைக் கவர, பிரதமர் நஜிப் ரசாக் பிரதிநிகளின் வழி பணப் பட்டுவாடா செய்வதாக, பொருளாதார நிபுணர் டாக்டர் ஜோமோ குவாமெ சுந்தரம் கூறினார்.

“பிரதமர், பிரதிநிதிகளின் வழி, ம.இ.கா.வினர் மட்டுமல்ல-பிறர் மூலமாகவும், சிறு சிறு இயக்கங்களை நிறுவி, பணத்தைக் கீழ்மட்டம் வரை கொண்டு செல்கின்றனர் (இந்தியர்களுக்கு).

“அவர் (நஜிப்) சில விஷயங்களைச் செய்திருக்கிறார், இது பொது மக்களின் உணர்வுகளை பாதித்துள்ளது, எனவே, பிஎன்-னுக்குச் சாதகமான சில உணர்வுகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன்.

“உண்மையில், எவ்வளவு என்று சொல்ல கடினமாக உள்ளது,” என்று ஜோமோ கூறினார்.

நேற்று, கோலாலம்பூர், பங்சாரில், “எதிர்கால சிந்தனை : 14-வது பொதுதேர்தலை நோக்கி மலேசியா” என்ற தலைப்பிலான ஒரு கருத்தரங்கில் அவர் இவ்வாறு பேசினார்.

அவரோடு,  பேங்க் நெகாராவின் முன்னாள் துணை கவர்னர் டாக்டர் ரொஸ்லி யாக்கோப், கருவூலத்தின் முன்னாள் செயலாளர் , ஷெரிஃப் காசிம்,  அமானா கட்சியைச் சேர்ந்த  டாக்டர்  ட்சுல்கிப்ளி அஹ்மத் மற்றும் டிஏபி  நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ ஆகியோர்  அக்கருத்தரங்கில் பேசினர்.

இந்தியர்களுக்கு அரசாங்கம் பல ஒதுக்கீடுகளைச் செய்துவருகிறது எனும் ஜோமோவின் கருத்துடன், சார்லஸ் ஒத்து போகிறார்.

குறிப்பாக, சிலாங்கூரை மீண்டும் கைப்பற்ற வேண்டும் எனும் நோக்கத்தோடு, அம்மாநில இந்தியர்களுக்குச் சற்று அதிகமாகவே ஒதுக்கப்படுகிறது என்று சார்லஸ் கூறினார்.

ஆக, “இந்தியர்களின் வாக்குகளைக் கவர்வதில், ஹராப்பான் கவனமாக செயல்பட வேண்டும்,” என்றார் அவர்.

சீனர்கள் கூட பி.என்.-க்குக் குறைவான எதிர்ப்பைக் காட்டலாம், அதுமட்டுமின்றி, ஹராப்பான் மீது அவர்களுக்கு நம்பிக்கை குறையவும் வாய்ப்புண்டு,” என்றும் ஜோமோ எச்சரித்தார்.

சார்லஸ் அந்த எச்சரிக்கையை ஒப்புக் கொண்டார். வரவிருக்கும் பொதுத் தேர்தலில், சீனர்கள் ஹராப்பானை முழுமையாக ஆதரிப்பார்கள் என்ற உத்தரவாதம் இல்லை என்று அவர் கூறினார்.