லியோ : மது, சலவை பிரச்சனையில் மதத்தைத் திணிக்க வேண்டாம்

இன, மத அடிப்படையில் இந்த நாட்டைப் பிரிக்க மலேசியர்கள் விரும்பவில்லை.

எனவே, மதத்தை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது என மசீச தலைவர் லியோ தியோங் லாய் கூறினார்.

சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய ‘பீர் திருவிழா’ மற்றும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமான சலவை கடை இரண்டையும் தொட்டு அவர் பேசினார்.

“ஒரு மதத்தில் தீவிரமாக இருப்பவர்கள், நிச்சயம் பிற மதத்தவரின் மனதைப் புண்படுத்துவர் என்பது இச்சம்பவங்களின் வழி நிரூபனமாகிறது,” என்றார் அவர்.

“கூட்டாட்சி அரசியலமைப்பு மக்களுடைய மத சுதந்திரத்தை உள்ளடக்கியது. ஆக, எந்த கொள்கையும் அரசியலமைப்பிற்கு உடன்பட்டே இருக்க வேண்டும்,” என்று லியோ கூறினார்.

“தங்கள் மத போதனைகளை அடிப்படையாகக் கொண்டு , மற்றவர்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறைகளை மாற்றவோ அல்லது தொந்தரவு செய்யவோ, அவர்கள் மீது மத போதனைகளைத் திணிக்கவோ கூடாது,” என்று மசீச தலைமையகத்தில் அவர்  பேசினார்.