பினாங்கில், கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால், 104 நோயாளிகள் மற்றும் புதிதாகப் பிறந்த நான்கு குழந்தைகள், நேற்று பினாங்கு மருத்துவமனையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டனர்.
வடகிழக்கு வட்டாரத்தில் இதுவரை இரண்டு இறப்புக்கள் பதிவாகியுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அறை, பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை அறை மற்றும் கீழ் தளத்தில் இருந்த போக்குவரத்து பிரிவு ஆகியவை வெள்ளத்தால் பாதிக்கப்ப்ட்டுள்ளதாக மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.
“மருத்துவமனை இயக்குநரின் அறிவுறுத்தலைப் பெற்ற பின்னர், காலை 2.30 மணியிலிருந்து 5.30 மணி வரை நோயாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது அனைவரும் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 75 வயதான , கம்போங் மஸ்ஜித், ஜாலான் பேராக்கை சேர்ந்த ஒருவரும், ஜாலான் பி.ரம்பியில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இருந்த ஒரு பெண்ணும் நீரில் மூழ்கி இறந்ததாக வடகிழக்கு மாவட்ட ஏசிபி அனுவார் ஓமார் கூறினார்.
செபராங் பிறையில், கப்பளா பதாஸ், தாசெக் குளுகோர், பாகன் டாலாம், பட்டர்வொர்த், பெர்மாத்தாங் ராவா, பெர்மாத்தாங் பாவ், செபெராங் ஜெயா, புக்கிட் தே, ஆல்மா, புக்கிட் தம்புன் மற்றும் சிம்பாங் அம்பாட் ஆகியப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
தீவு பகுதியில், ஜார்ஜ் டவுன், தஞ்சோங் புங்கா, ஜாலான் மஸ்ஜிட் நெகிரி, ஜாலான் பேராக், ஜாலான் பி ராம்லி, கம்போங் டோடோல், பாலிக் புலாவ், சுங்கை அரா, பாயான் லெப்பாஸ், பாயான் பாரு, தெலுக் கும்பார் மற்றும் தெலுக் பஹாங் ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
செப்ராங் பிறையில், ஜாலான் கூலிம், ஜாலான் புக்கிட் தெங்கா மற்றும் ஜாலான் பெர்மாத்தாங் பாவ் ஆகிய சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.
மாநிலத்தில் வானிலை இன்னும் மேகமூட்டமாகவும் அவ்வப்போது மழை பெய்த வண்ணமாகவும் உள்ளது.