14-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, சீனர்களிடம் அக்கட்சியைப் பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டுமென, இன்று பிரதமர் நஜிப் ரசாக் மசீச பேராளர்களைக் கேட்டுக்கொண்டார்.
“பொதுத் தேர்தலில் வென்றாலும், ஜனநாயக செயற்கட்சியால் (டிஏபி) அரசாங்கத்தை அமைக்க முடியாது என சீன சமூகத்திடம் சொல்லுங்கள்,” என பிரதமர் கூறினார்.
“அவர்களால் சிறப்பாக செயல்பட முடியாது என்பது கடந்த பொதுத் தேர்தலிலிருந்து பார்த்து வருகிறோம். நல்லமுறையில் செயல்பட்டாலும், அவர்களால் அரசாங்கத்தை நிர்வகிக்க முடியாது,” என, நேற்று மசீச தேசிய மாநாட்டில் பிரதமர் பேசினார்.
மசீச-வுக்கு 7 நாடாளுமன்ற இடங்கள் உள்ளன, இன்னும் அதிகமான நாற்காலிகளை வென்றால், சீனர்களை இன்னும் சிறப்பான முறையில் பிரதிநிதிக்கலாம் என்றார் அவர்.
கடந்த பொதுத் தேர்தலில், 7 நாடாளுமன்ற இடங்களை மட்டுமே வென்றிருந்தாலும், மசீச-வுக்கு 3 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டதாக நஜிப் கூறினார்.
பி.என்.-ஐ ஆதரிக்காமல், கோரிக்கைகளை முன் வைக்காதீர்கள்
“அதனால்தான், சீன சமூகத்திற்கு இன்னும் அதிகம் வேண்டுமென்றால், தயவு செய்து பி.என்.-ஐ ஆதரியுங்கள். இப்போது, மசீசவில் 7 எம்.பி.-கள் உள்ளனர், 15 எம்.பி.கள் இருந்தால் இன்னும் பலமாக இருக்கும்,” என்று அவர் மசீச தலைமையகத்தில் கூடியிருந்த கட்சி உறுப்பினர்களிடையே பேசினார்.
“அரசாங்கத்தில் நாங்கள் சீனர்களின் கருத்துகளைக் கேட்கிறோம்- அவர்களுக்கு என்ன வேண்டும், சீன பிரதிநிதிகள் பலமானவர்களா பலவீனமானவர்களா? தேர்வு உங்கள் கைகளில் உள்ளது, சீன சமூகத்திடம் சொல்லுங்கள், டிஏபியால் அரசாங்கத்தை அமைக்க முடியாது,” என்றார் அவர்.
கடந்த பொதுத் தேர்தலில், போட்டியிட்ட 51 தொகுதிகளில் 38-ல், டிஏபி வென்றது. 103 சட்டமன்றத் தொகுதிகளில், 95 இடங்களைக் கைப்பற்றி, அம்னோவிற்கு அடுத்த நிலையில் பெரிய கட்சியாக டிஏபி திகழ்ந்தது.
அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல், கோரிக்கை பட்டியலை சீனர்கள் கொண்டிருக்க முடியாது என்றும் அவர் நினைவுறுத்தினார்.
“ஓட்டு போடாமல், நீங்கள் விரும்புவதை பெறமுடியாது.”
மலாய்க்காரர்களைப் புறக்கணிக்க முடியாது
“பிறகு, அரசாங்கம் மலாய்க்காரர்களுக்கு மட்டும் அதிகம் கொடுக்கிறது என்று புகார் செய்யாதீர்கள், அவர்கள் எங்களை ஆதரிக்கின்றனர். அம்னோ அதிகமான நாடாளுமன்ற இடங்களில் நின்று, வெல்கிறது.
“நான் அவர்களைப் புறக்கணிக்க முடியாது, பிறகு அவர்கள் அம்னோ அதிக இடங்களை வென்றது, ஆனால், பிரதமர் அம்னோவை புறந்தள்ளிவிட்டார் என குறை கூறுவார்கள்,” என்றும் அவர் பேசினார்.
“நீங்கள் பணம் சம்பாதிப்பதில் வல்லவர்கள், மற்ற விசயங்களிலும் கெட்டிக்காரர்கள், ஆனால், நாட்டில் அரசியல் நிலைத்தன்மை, அமைதி இல்லாவிட்டால் உங்களால் பணம் சம்பாதிக்க முடியுமா,” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பாரிசான் அரசாங்கம் கொடுக்கும் வாய்ப்புகளாலேயே, இந்நாட்டில் சீனர்கள் வெற்றிகரமாக வியாபாரம் செய்ய முடிகிறது என்றும் அவர் கூறினார்.
“பாரிசான் அரசாங்கம் வாய்ப்புகள் கொடுக்கிறது….. எம்.ஆர்.டி. திட்டங்கள் எல்லாம் யாருக்குக் கொடுக்கப்பட்டது? உங்களுடைய பங்கு உங்களுக்கு நியாயமான முறையில் கிடைக்கிறது, மலாய்க்காரர்களுக்கு மட்டும் கிடைக்கவில்லை, நாம் அனைவரும் வாய்ப்புகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்,” என்றும் அவர் பேசினார்.