தீர்க்கப்படாத பல ஊழல் அவதூறுகளைச் சுட்டிக்காட்டி தாம்புன் நாடாளுமன்ற உறுப்பினர் அஹமட் ஹுஸ்னி ஹனாட்ஸ்லா “தூய குதிரையைப்” பின்தொடர வேண்டுமேயன்றி ஊழல் குதிரையை அல்ல என்று பிகேஆர் சுங்கைப் பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜொஹாரி அப்துல் கூறினார்.
பக்கத்தானின் ஆறு குதிரைகளைவிட (தலைவர்கள்) தாம் ஒரு குதிரையை (நஜிப்பை) பின்தொடர்வதில் பெருமைப்படுவதாக ஹுஸ்னி கூறியதற்கு எதிர்வினையாற்றிய ஜொஹாரி இவ்வாறு கூறினார்.
டாக்டர் மகாதிர் முகமட், முகைதின் யாசின், அன்வார் இப்ராகிம், லிம் குவான் எங், லிம் கிட் சியாங் மற்றும் முகமட் சாபு ஆகியோரே அந்த ஆறு குதிரைகள்.
நஜிப் மேற்கொண்டுள்ள ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை பாராட்டிய ஹுஸ்னி, நஜிப் ஊழலேயற்ற பண்பை விட்டுச் செல்வார் என்று கூறினார்.
இக்கூற்று உண்மைக்குப் புறம்பானது என்று ஜொஹாரி சாடினார்.
176 நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஊழல் விவகாரத்தில் மலேசியா 55 ஆவது இடத்தில் இருக்கிறது என்று கூறிய ஜொஹாரி, இன்னும் கவனிக்கப்படாத ஊழல்கள் ஏராளம் இருக்கின்றன என்றார்.