மலேசியவாழ் தமிழ் மக்களுக்கு நீண்ட காலம் தொன்மொழியாம் தமிழைப் பயிற்றுவித்த மூத்த தமிழறிஞரும் இலக்கியப் படைப்பாளரும் இன உணர்வாளரும் பகுத்தறிவாளருமான பேராசிரியர் மா. நன்னன் தமிழகத்தின் தலைநகரில் காலமானார். ஆஸ்ட்ரோ தமிழ் அலைவரிசைகளில் ஒன்றான வானவில்லின்வழி இவரது பாடங்கள் நமக்கு அறிமுகமாயின.
தொடக்கப்பள்ளி ஆசிரியராக பொது வாழ்வைத் தொடங்கிய இவர், காந்தியின் கொள்கையை ஏற்று இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பின்னர் பெரியாரின் சிந்தனையை தன் சிந்தையில் ஏற்றி மொழிப் பாதுகாப்புப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர் நன்னன்.
தமிழ் மொழியின்பால் கொண்ட பெருங்காதலால் புலவர், முனைவர் பட்டங்களைப் பெற்ற இவர் தமிழ்ப் பேராசியராக தமிழக மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்தவர். தமிழக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகவும் கடமை ஆற்றியுள்ளார் இப்பெருந்தகை.
தமிழ்க் கல்வி வட்டத்தில் ‘நன்னன் முறை’ என்று சொல்லும் அளவிற்கு புதுமையான முறையை ஏற்படுத்தி, இளையோரையும் பெரியோரையும் கவர்ந்தவர் மா.நன்னன் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்காக ஏராளமான பாட நூல்களையும் மொழியியல், பகுத்தறிவு சார்ந்து எண்ணற்ற நூல்களையும் இயற்றிய நன்னன், மிகப்பெரிய இலக்கியப் படைப்பாளி ஆவார். சென்னைத் தொலைக்காட்சியிலும் மக்கள் தொலைக்காட்சியிலும் தமிழைக் கற்றுத் தந்த மா.நன்னன், ‘21-ஆம் நூற்றாண்டின் தமிழ்த் தாத்தா’ என்று போற்றத்தகுந்தவர். முதுமை காரணமாக உடல் நலிவுற்று இந்த உலகை விட்டுப் பிரிந்தாலும் இவரின் திருப்பெயர் தமிழ் இலக்கிய உலகில் எஞ்ஞான்றும் நிலைத்திருக்கும்.
- செம்பருத்தி
தமிழறிஞர் நன்னன் அவர்களின் மறைவு தமிழ்கூறு நல்லுலகுக்கு ஈடு செய்யவொண்ணாத பேரிழப்பாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய உலகத் தமிழர்களின் சார்பாக இறையை வேண்டுகிறேன்.
இந்த செய்தியை படித்ததும் என்மனதுமட்டும்
இல்லாமல் கண்களும் கலங்கியது,
தமிழுக்காக வாழ்ந்தவர்,அந்நாரின்ஆத்மா
சாந்தியடைய இறைவனை இருகரம்
கூப்பி வேண்டுகிறேன்,அலை ஓசை!
அன்னாரின் ஆன்மா இறைவனடி சேர வேண்டுவோம். சிவசிவ
ஐயா அவர்களின் மறைவு செய்தி கேட்டதும் மனம் வேதனை கொண்டது. நல்ல தமிழறிஞர் தூய தமிழ் உணர்வாளர் முற்போக்கு சிந்தனையாளர் ஐயாவின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கு பேரிழப்பாகும் அவரின் ஆத்மா அமைதி பெற வேண்டுகிறேன்
ஐயா அவர்களின் ஆத்மா அமைதி பெற வேண்டுகிறேன்..