லிம் : வெள்ள நிவாரணத்திற்கான புதிய நிதி எதனையும் நஜிப் அறிவிக்கவில்லை

பினாங்கில் வெள்ளத் தடுப்பு திட்டத்திற்கான புதிய ஒதுக்கீடுகள் எதனையும் பிரதமர் நஜிப் அறிவிக்கவில்லை என முதலமைச்சர் லிம் குவான் எங் கூறியுள்ளார்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர், மலேசிய திட்டத்தின் கீழ், வெளியிடப்படாத வெள்ள நிவாரண திட்டங்களுக்கான 1 பில்லியன் ரிங்கிட்டையே  நஜிப் குறிப்பிட்டார் என லிம் விளக்கப்படுத்தினார்.

நேற்று, பிரதமர் பினாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று பகுதிகளைப் பார்வையிட்டார்.

“பிரதமர் அறிவித்த RM150 மில்லியன், முன்னதாக, 2016 நவம்பர் 8-ஆம் தேதி, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் வான் ஜுனாய்டி துவான்கு ஜாபார் அவர்களால் அறிவிக்கப்பட்டதாகும்,” என லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இருப்பினும், நஜிப்பின் வருகைக்காகவும், RM1 பில்லியனைத் தீவிரமாக பரிசீலிக்க விருப்பம் தெரிவித்ததற்காகவும் பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

நேற்று, பினாங்கில் ஏற்பட்ட வெள்ளப் பிரச்சனைகளைச் சமாளிக்க, புத்ராஜெயா RM150 மில்லியன் ஒதுக்கீட்டை ஒப்புக் கொண்டுள்ளதாகவும், மேலும் கூடுதல் நிதியுதவியைப் பரிசீலிப்பதாகவும் பிரதமர் நஜிப் அறிவித்திருந்தார்.

13 வெள்ள நிவாரண திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும், அவற்றை நடைமுறைப்படுத்த RM1 பில்லியன் தேவைபடுகின்றது என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.

வெள்ள மீட்புப் பணிகளைத் தொடர்ந்து, பழைய நிலையை மீட்டெடுப்பதிலேயே அரசாங்கத்தின் தற்போதைய முழு கவனம் இருப்பதாக லிம் தெரிவித்தார்.