புவா அமைச்சரைக் கேட்கிறார்: “நீங்கள் ஏழை மலாய்க்காரர்களுக்கு என்ன கொடுக்கீன்றீர்கள்?”

பூமிபுத்ரா சமூகத்துக்கு தரம் குறைந்த பொருட்களை விற்பதின் மூலம் பாதகத்தைச் செய்வது உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரியே என டிஏபி பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா திருப்பிச் சாடியிருக்கிறார்.

எல்லாவற்றையும் விட கொடுமையானது தமது சமூகத்தைச் சார்ந்த ஏழை மக்களுக்கு அவர் அதனைச் செய்து வருவதுதான் என்றார் அவர்.

கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகளில் தரம் குறைந்த பொருட்கள் விற்கப்படுவதை அம்பலப்படுத்தியதற்காக புவா கடுமையாகக் குறை கூறப்பட்டு வருகிறார்.

அந்தக் கடைகளுக்கு 40 மில்லியன் ரிங்கிட் உதவித் தொகை வழங்கவும் கடும் கட்டுப்பாடுகள் இல்லாமல் விற்கப்படும் அந்தப் பொருட்களுடைய தரத்திற்கு உத்தரவாதம் அளிக்கவும் இஸ்மாயில் அமைச்சு தயாராக இருப்பது,  எல்லாம் அரசியல் ஆதாயத்துக்காக செய்யப்படுவதைக் காட்டுவதாகவும் புவா கூறிக் கொண்டார்.

“பிஎன் அமைச்சர்களுக்கு மலேசியர்களுடைய குறிப்பாக அதிகம் பாதிக்கப்படும் மலாய்க்காரர்களுடைய நலன்களில் அக்கறை இல்லை”, என அவர் இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.

இன வெறி அடிப்படையில் கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகளை அந்த பெட்டாலிங் ஜெயா உத்தரா எம்பி-யும் அவரது பக்காத்தான் ராக்யாட் தோழர்களும் தாக்குவதாக இஸ்மாயில் தமது முகநூல் ( Facebook ) பக்கத்தில் எழுதிய கட்டுரையில் குறிப்பிடுள்ளதற்கு புவா பதில் அளித்தார்.

கடந்த செவ்வாய்க் கிழமை இஸ்மாயில் சொன்னது:

“tony pua DAP ni masih tk habis2 menfitnah KR1M. kini dgn tuduhan tdk berkualiti. semlm isu ini tlh dijwb oleh Mydin & pembekal IKS. jelas agenda DAP yg ingin menguburkan KR1M yg rata2 supplier nya terdiri dari IKS bumiputra. Rata2 pembeli nya terdiri dari gol berpendapatan rendah bumiputra. Mydin pun bumiputra. malangnya ada bumiputra spt nurul izah & zulkifli ‘menyalak’ bagi pihak DAP.”
(கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகளை டிஏபி-யின் டோனி புவா தொடர்ந்து தாக்கி வருகிறார். தரம் குறைந்த விற்கப்படுவதாக அவர் இப்போது கூறிக் கொள்கிறார். அந்த பிரச்னைக்கு மைடினும் அவரது விநியோகிப்பாளர்களும் பதில் சொல்லி விட்டனர். கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகளை புதைப்பதே டிஏபி-யின் திட்டமாகும். ஏனெனில் அதன் விநியோகிப்பாளர்கள் அனைவரும் பூமிபுத்ரா சிறிய, நடுத்தர வணிகர்கள். அந்தக் கடைகளில் பொருட்களை வாங்குவோர் குறைந்த வருமானம் பெறும் பூமிபுத்ராக்கள் ஆவர். மைடினும் ஒரு பூமிபுத்ரா. லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா, கோல சிலாங்கூர் எம்பி சுல்கெப்லி அகமட் போன்ற பூமிபுத்ராக்கள், டிஏபி சார்பில் ‘குரைப்பது’ வருத்தத்தை அளிக்கிறது)

பல பொருட்கள் குறிப்பிடப்பட்ட தரங்களுக்கு ஏற்ப இல்லை என்பதை பக்காத்தான் ராக்யாட் அம்பலப்படுத்தியிருக்கா விட்டால் “பல மலாய், ஏழை மலேசியர்கள் தரம் குறைந்த பொருட்களை இன்னும் உட்கொண்டிருப்பார்கள் என்றும் புவா சொன்னார்.

ஒரே மலேசியா குழந்தைகள் பால் மாவில் “அதிர்ச்சியூட்டும் குறைபாடுகள்” கண்டு பிடிக்கப்பட்டுள்ளது மிகவும் கவலை அளிக்கும் விஷயம் என அவர் சொன்னார்.

அந்தப் பொருட்கள் மீதான சோதனையை மைடின் நடத்தும் வரையில் அவை விற்பனை செய்யப்படுவதிலிருந்து நேற்று தொடக்கம் மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

“முழுமையான ஒரு மலாய் மற்றும் ஏழை மலேசியக் குழந்தைகள் தலைமுறை ஊட்டச்சத்துக் குறைவாலும் நோயினாலும் மோசமான உடல் வளர்ச்சியாலும் பாதிக்கப்படக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கும்.”

“கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகளில் பொருட்களை வாங்கும் பெரும்பாலான மலாய் பயனீட்டாளர்கள், இதர ஏழை மலேசியர்கள் ஆகியோருடைய நலன்களுக்கு பக்காத்தான் ராக்யாட்தான் உண்மையிலேயே போராடுகிறது,” என்றும் புவா சொன்னார்.

தரம் குறைந்த பொருட்கள்

பல உணவுப் பொருட்கள் மீது நடத்தப்பட்ட சோதனைகள், 1983ம் ஆண்டுக்கான உணவுச் சட்டத்திலும் 1985ம் ஆண்டுக்கான உணவு விதிமுறைகளிலும் கூறப்பட்டுள்ள குறைந்த பட்ச சட்டப்பூர்வத் தரத்தைக் கூட பூர்த்தி செய்யவில்லை என பக்காத்தான் இந்த வாரத் தொடக்கத்தில் அம்பலப்படுத்தியிருந்தது.

அத்துடன் சத்து மலேசியா குழந்தைகள் பால் மாவு அதே மாதிரியிலான மற்ற பால் மாவுகளை விட அதிக விலைக்கு விற்கப்படுவதும் விட்டமின் ஏ அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக இருப்பதும் சட்டப்பூர்வமாக தேவைப்படும் 15 வகையான விட்டமின்களும் தாதுப் பொருட்களும் இல்லை என்பதும் கால்சியம், இரும்புச் சத்து பற்றாக்குறையாக இருப்பதும் சோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

பேரங்காடிகளில் குறைந்த விலையில் விற்கப்படும் அவற்றின் சொந்த மாதிரிப் பொருட்களுடன் கெடாய் ராக்யாட் சத்து மலேசியா பொருட்களை ஒப்பீடு செய்வதின் மூலம் பக்காத்தான் “நேர்மையற்ற” முறையில் நடத்து கொள்வதாகவும் இஸ்மாயில் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்தக் கடைகளை இயக்கி வரும் மைடின் நிறுவனமும் பக்காத்தான் கூறுவதை பாதி உண்மைகள் என நிராகரித்துள்ளது. என்றாலும் அது மேலும் சோதனை செய்வதற்காக குழந்தைகள் பால் மாவை விற்பதை நிறுத்தி வைத்துள்ளது.

அந்தக் கடைகளில் வைக்கப்பட்டுள்ள மிளகாய் சாற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக கனிமங்கள் இருப்பதை பயனீட்டாளர் அமைப்பு ஒன்றும் கண்டு பிடித்துள்ளது.

அந்தக் கண்டுபிடிப்பு தவறானது என்பதை அந்தப் பொருளின் விநியோகிப்பாளர் நடத்திய சொந்தச் சோதனைகள் காட்டுவதாக மைடின் கூறியுள்ளது. அதனால் மிளகாய் சாறு இன்னும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. என்றாலும் அதனையும் மைடின் சோதனைக்கு அனுப்பியுள்ளது.