வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பினாங்கு மாநிலத்தை சீரமைத்து அது பழைய நிலைக்கு மீட்சிபெற அம்மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் ரிம100 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடைய வழக்கமான நிலைக்குத் திரும்பி வந்து பினாங்கை அதன் முன்னாள் மகிமைக்கு இட்டுச் செல்வதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று பினாங்கு சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்த முதல் அமைச்சரளவிலான அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
பினாங்கு மீட்சி பெரும் திட்டம் நவம்பர் 11 மற்றும் 12 இல் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.
அவரது உரையின் போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தும்படி குவான் எங் கேட்டுக்கொண்டார்.
பினாங்கு டிஎபி மக்களுக்கு உதவுவதற்காக 1,000 தன்னார்வலர்களைப் பதிவு செய்துள்ளதோடு ரிம5 மில்லியனை 64 மணி நேரத்தில் திரட்டியுள்ளது. இந்நிதி திரட்டல் நவம்பர் 6 இல் தொடங்கப்பட்டது.