ரஃபிசி : 14-வது பொதுத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமா, எரிபொருளுக்கு மானியம்  கொடுங்கள்

பிரதமர் நஜிப் இரசாக், மக்களின் இதயங்களைக் கவர்ந்து, 14- வது பொதுத் தேர்தலில் வெல்வதற்கு ரஃபிசி ரம்லி சில குறிப்புகளைக் கொடுத்தார்.

டிசம்பர் 2017 தொடங்கி, ஜனவரி 2018 வரை எரிபொருளுக்கு RM0.20 சென் மானியம்  வழங்க வேண்டும் என்று அந்த பாண்டன் எம்.பி. கூறினார்.

“டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் மக்களுக்கு இக்கட்டான மாதங்கள் ஆகும். பள்ளி திறக்கப்படுவதால், பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டும், காலணிகள் வாங்க வேண்டும்,” என்று, இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

நேற்று, கடந்த அக்டோபர் 11 முதல், நான்காவது முறையாக எண்ணெய் விலைகள் அதிகரித்தன. ரோன் 95-ன் விலை RM0.07 சென் அதிகரித்து RM2.31 –ஆக பதிவு செய்துள்ளது.

கடந்த வாரம், லிட்டருக்கு RM2.54 விலையில் இருந்த ரோன்97, லிட்டருக்கு RM0.06 அதிகரித்து, தற்போது RM2.60 விலையில் உள்ளது.

கடந்த 2008 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, நஜிப் நிதி அமைச்சராக பதவியேற்றதிலிருந்து, நேற்று அறிவிக்கப்பட்ட எண்ணெய் விலைதான், மிக அதிக விலை உயர்வு என்று ரஃபிசி தெரிவித்தார்.

“பெட்ரோல் மற்றும் டீசலின் வருடாந்த சராசரி நுகர்வு 27 பில்லியன் லிட்டர் என்று, நாடாளுமன்றத்தில் என் கேள்விக்கு நஜிப் பதிலளித்தார். ஆக, மாதத்திற்குப் பெட்ரோல் மற்றும் டீசல் சராசரி 2.25 பில்லியன் லிட்டர் ஆகும்.

“டிசம்பர் 2017 முதல் ஜனவரி 2018 வரை, லிட்டருக்கு RM0.20 மானியம், RM900 மில்லியன் ஒதுக்கீடு மட்டுமே ஆகும். இது இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து நஜிப் மேற்கோள் காட்டியுள்ள 25% வருமானம் மட்டுமே ஆகும்,” என்று அவர் கூறினார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தால், மத்திய அரசாங்கத்திற்கு “பெருத்த இலாபம்” கிடைக்கும் என்றும் ரஃபிசி கூறினார்.

“அரசாங்கம் நிறுவனங்களிடமிருந்து அதிக வருமான வரி வசூல் பெறும், பெட்ரோல் வருவாய் வரி வசூல் உயர்வதோடு, தனிநபர் வருமான வரி வசூலும் அதிகரிக்கும்.

“ரோன் 97 மற்றும் பெட்ரோலியம் அடிப்படையிலான தயாரிப்புகள் ஜி.எஸ்.தி.-க்கு உட்பட்டவை. ஆதலால், பொருள், சேவை மற்றும் வருமான வரியும் அதிகமாக சேகரிக்கப்படும். கூடுதலாக, அரசாங்கம் பெட்ரோலியத்திற்குக் கூடுதல் ரோயல்டியைப் பெறுவதோடு, பெட்ரோனாஸிடமிருந்து அதிக ஈவுத் தொகையும் பெற்றுக் கொள்ளும்,” என்று அவர் கூறினார்.