2018 பட்ஜெட்டைத் தாக்கல் செய்த 13 நாட்களுக்குப் பின்னர், நாடாளுமன்றத்தில் எட்டு நிமிடங்கள் மட்டும் உரையாற்றி சென்ற பிரதமர் நஜிப் ரசாக்கை, கிளானா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் சாடினார்.
“இன்று காலை 10.04-க்கு, கேள்விக்குப் பதில் அளித்த அவர், 10.12-க்கு மணிக்கு சென்றுவிட்டார்,” என்று வோங் கூறினார்.
நஜிப் இன்று கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக நாடாளுமன்றத்தில் இருந்தார்.
இருப்பினும், அந்த எட்டு நிமிடங்கள், ‘எளிதான’ கேள்விக்கு மட்டும் பதிலளிக்கும் வகையில் நஜிப் திட்டமிட்டிருந்தார், என்று வோங் கூறினார்.
“நான்கு நிமிட பதில் பதிப்பை வாசித்தப் பிறகு, அம்னோ எம்.பி.-க்கள் சிலரின் (கேள்விகள் தன்னிச்சையாக இருக்க வேண்டும்) பாராட்டுகள் தொடர்ந்தன, ‘வெற்றிகரமான இத்திட்டத்திற்கு நாங்கள் வாழ்த்து தெரிவிக்கிறோம், நாம் டிஜிட்டல் பொருளாதாரத்தில் உலகத் தலைவர்களாக இருக்கின்றோம் …’ இதுபோன்றவை,” என்று அவர் கூறினார்.
பின்னர், தொடர் கேள்விகளுக்கு நஜிப் இரண்டு நிமிடங்கள் மட்டும் பதிலளித்தார் என்று வோங் கூறினார்.
“நாடாளுமன்ற கேள்வி – பதில் அங்கத்தை, நஜிப் நிர்வாகம் வசனம் எழுதி, வாசித்து, நாடக வடிவில் அற்புதமாக மாற்றியுள்ளது,” என்று வோங் கூறினார்.
அடுத்தடுத்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த ஏனைய அமைச்சர்களின் பதில்களை செவிமடுக்காமல், அவர்களுக்கு ஆதரவளிக்காமல் அலட்சியப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தைவிட்டு நஜிப் வெளியேறினார் என்று வோங் தெரிவித்தார்.
நஜிப் வெளியேற முற்பட்டபோது, தஞ்சோங் காராங் எம்.பி. நோ ஒமார் மற்றும் பொந்தியான் எம்.பி. மஸ்லான் இருவரும், உடனடியாக அவருக்குக் கதவைத் திறந்துவிட்டதாக அவர் கூறினார்.
“மலேசியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் மெதுவாக இறந்துகொண்டிருப்பதை இன்றையக் காலை சம்பவம் படம்பிடித்துக் காட்டியது ,” என்று அவர் கூறினார்.
இன்று 18 அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் நாடாளுமன்றம் வந்திருந்தனர், இது நஜிப்பின் மொத்த அமைச்சரவையில் 30% குறைவாகவே இருந்தது என்றும் வோங் குறிப்பிட்டார்.
இன்று, 25-வது ஆசியப் பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபெக்) உச்சமாநாட்டில் கலந்து கொள்வதற்காக, 3 நாள் பயணம் மேற்கொண்டு, நஜிப் டானாங், வியட்நாம் சென்றுள்ளார்.