என்எப்சி சிலருக்கு மட்டும் “கௌகேட்” மீதான மௌனத்தை கலைக்கிறது

அரசாங்கம் வழங்கிய எளிய நிபந்தனைகளைக் கொண்ட 181 மில்லியன் ரிங்கிட் கடன் தொடர்பான சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ள என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் தனது மௌனத்தைக் கலைத்து பிரச்னையைத் தெளிவுபடுத்த முன் வந்துள்ளது.

என்றாலும் இன்று காலை நெகிரி செம்பிலான் கெமாஸில் உள்ள என்எப்சி தலைமையகத்துச் சென்ற பல நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தேர்வு செய்யப்பட்ட ஊடகங்களுக்கு மட்டுமே நிருபர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்த வரவேற்பு அதிகாரி கூறியதாக பெயர் குறிப்பிட விரும்பாத நிருபர் ஒருவர் கூறினார்.

“எங்களுக்கு அழைப்புக் கிடைக்கவில்லை. ஆனால் நாங்கள் நிருபர்கள் சந்திப்புப் பற்றி அறிந்து கொண்டு அங்கு சென்றோம். ஆனால் நாங்கள் பட்டியலில் இல்லை என வரவேற்பாளர் சொன்னார்”

சின் சியூ டெய்லி, சைனா பிரஸ், நன்யாங் சியாங் பாவ், ஒரியண்டல் டெய்லி, குவோங் வா யிட் போ ஆகியவை அனுமதிக்கப்படாத ஊடகங்களில் அடங்கும்.

தேசிய விலங்குக் கூட மையம் “ஒரே குழப்பமாக” நிர்வாகம் செய்யப்படுவதாக தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை வருணித்த பின்னர் என்எப்சி பற்றிய தகவல்களை வெளியிடப் போவதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் மருட்டிய பின்னர் அதன் மீது சர்ச்சை மூண்டது.

அதற்குப் பின்னர் கால்நடை வளர்ப்புக்கும் மாட்டிறைச்சி விநியோகத்துக்கும் வழங்கப்பட்ட கடன், பங்சாரில் ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஒன்றை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டதையும் அந்தப் பணத்திலிருந்து இதர அம்னோ தலைவர்களும் நன்மை அடைந்திருப்பதையும் ராபிஸி அம்பலப்படுத்தினார்.

இதனிடையே மலேசியாகினி என்எப்சி பிரதிநிதி ஒருவருடன் தொடர்பு கொண்ட போது அந்த விவகாரம் மீது பேசுவதற்கு தமக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை என்பதால் பெயர் குறிப்பிட விரும்பாமல் நிருபர்கள் சந்திப்பு அனைத்து ஊடகங்களுக்கும் திறந்து விடப்படுவதற்கு திட்டமிடப்பட்டதாகக் கூறினார்.

“எனக்குத் தெரிந்த வரையில் அனைத்து ஊடகங்களுக்கும் அது திறக்கப்பட்டுள்ளது. என்றாலும் சில ஊடகங்களுக்கு அழைப்பு கிடைக்கவில்லை. சிலர் இன்று காலை எங்களை அழைத்து ஏமாற்றம் தெரிவித்துக் கொண்டனர்”, என்றார் அவர்.

பல முக்கியமான ஊடகங்களை மட்டுமே அழைப்பது என்எப்சி-யின் வழக்கம் என்றும் அவை மற்ற ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“நிருபர்கள் சந்திப்பில் மிக அதிகமானவர்கள் இருப்பதை விரும்பாமல் எண்ணிக்கையைக் குறைக்கவும் அவர்கள் முடிவு செய்திருக்கலாம்.”

TAGS: