இன்று டிஎபி அதன் மத்தியச் செயற்குழுவிற்கான இரண்டாவது மறுதேர்தலை மனமின்றி நடத்துகிறது. இத்தேர்தலை கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஒரு ஹோலிவுட் படத்திற்கு ஒப்பிட்டார்.
“மலேசியாவில் எந்த ஓர் அரசியல் கட்சியும் அதன் மத்தியச் செயற்குழுவிற்கான தேர்தலை மூன்று முறை நடத்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டதில்லை – 2012, 2013 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் – மூன்று தடவைகளிலும் அதே வேட்பாளர்கள் பட்டியல் பயன்படுத்தப்பட்டது.
நாங்கள் 2012 இல் உறைய வைக்கப்பட்டு, இப்போது நான்கு ஆண்டுகளுக்கு மேல் கடந்த பின்னர் மறுதேர்தல் நடத்துகிறோம். இது வடிகட்டின முட்டாள்தனம் என்று குவான் எங் கூறினார்.
இது போன்றது ஹோலிவுட் படத்தில்தான் நடக்கும், நிஜ வாழ்க்கையில் அல்ல என்று நாம் நினைத்தோம். ஆனால், அது இப்போது மலேசியாவில் நடக்கிறது என்று மத்தியச் செயற்குழுவை மறுதேர்வு செய்வதற்காக ஷா அலாமில் இன்று நடபெறும் டிஎபியின் சிறப்பு மாநாட்டில் குவான் எங் கூறினார்.
கட்சியின் நன்மையைக் கருதி மன்றங்கள் பதிவகத்தின் உத்தரவை ஆட்சேபத்தின்கீழ் டிஎபி ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இது ஒரு பெரும் அநியாயம், ஆனால் நாம் இதற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் கட்சியின் பதிவு இரத்து செய்யப்படும் சாத்தியம் இருந்தது.
நீதிமன்றத்திற்குச் சென்று நாம் வெற்றி பெற முடியும். நாம் நீதிமன்றம் சென்றால், 14 ஆவது பொதுத் தேர்தலில் நாம் ரோக்கெட் சின்னத்தைத் பயன்படுத்த முடியாது என்றாரவர்.
மன்றங்கள் பதிவாளர் (ROS)ஒரு மன்னர், அவர் ஒன்றைச் செய்யும்படி டிஎபியிடம் கோர முடியும், ஆனால் அதை அவர் இதர கட்சிகளிடம் கோரவில்லை, குறிப்பாக பிஎன் மற்றும் அம்னோ, என்று அவர் ஏளனமாகக் கூறினார்.
டிஎபி மத்தியச் செயற்குழுவின் மறுதேர்தலுக்கான வாக்களிப்பு இன்று மதியம் 12 க்கு தொடங்கி பிற்பகல் மணி 2 க்கு முடிவுற்றது. முடிவுகள் மாலை மணி 6 அளவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1,300 க்கு மேற்பட்ட பேராளர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.